1.3.13

ஊரும் அயலும் March 2013

சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் தண்ணீரில்லை
news
கொடிகாமத்தில் இயங்கும் சாவகச்சேரி பிரதேச சபை தலைமை அலுவலகத்தில்  கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அங்கு தண்ணீர் இல்லாததால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பிரதேச சபைக்கான தலைமை அலுவலகக் கட்டடம் 4 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இதன்போது வளாகத்தினுள் கிணறும் நிர்மாணிக்கப்பட்டது.
கடந்த வருடம் தலைமை அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கத் தொடங்கிய காலத்தில் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பவுசர் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது.
மழை காலம் ஆரம்பித்ததால் கிணற்று நீர், குடிதண்ணீருக்கு அன்றி ஏனைய தேவைகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அங்கு கடமையாற்றுவோர் இயற்கைத் தேவை களுக்கு தண்ணீர் இன்மையால் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. 
பிரதேச சபைத் தலைமை அலுவலகத்துக்குத் தேவைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அங்கு குடிதண்ணீர் இல்லாததால் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குடி தண்ணீர் இன்மை தொடர்பாக பிரதேச சபையின் உயர் அதிகாரியிடம் பொதுமக்கள் முறையிட்டால், உதயன் பத்திரிகைக்கு முறையிடுங்கள், அவர்கள் தண்ணீர் தருவார்கள் என்று பொறுப்பற்ற வகையில் பதிலளிப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவித்தனர்.
கடந்த வருடம் பிரதேச சபை தலைமை அலுவலகத்தின் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அங்கு கடமையாற்றும் உத்தி யோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்குவதாக "உதயனில்' செய்தி வெளியாகி இருந்தமை குறிப்பிடத் தக்கது. 


யாழ்ப்பாணம் வறணி பகுதியில் தொடர் கொள்ளை - பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை! !

http://thedipaar.com/new/news/news.php?id=59188&cat=eelam 28  March  2013  07:43:03 AM 
Bookmark and Share
www.thedipaar.com
யாழ்ப்பாணம், வறணி, இயற்றாலை பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அப்பிரதேசத்தில் இரவு வேளைகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்குடன் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இரவுநேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் அதிகாரியாக புதிதாக பதவியேற்றுள்ள எதிரிசிங்க, கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று, பொதுமக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், பிரச்சினைக்கான தீர்வினையும் மேற்கொண்டு வருகின்றார்.

இவ்வாறு, வரணி இயற்றாலை பிரதேசத்தில் நடைபெற்ற பொதுமக்களுடனான கலந்துரையாடலின்போதே, இரவு நேரத்தில் நிகழும் கொள்ளை, வழிப்பறி, மதுபாவனை, திருட்டு மாடுபிடித்தல் போன்ற சட்டவிரோத சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர்பில் புதிய பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன், இரவுவேளைகளில் தமது பிரதேசத்தில் இரண்டு பொலிஸாரை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மக்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கிணங்கவே, இயற்றாலை பிரதேசத்தில் மக்கள் பாதுகாப்பிற்கென இரவுவேளைகளில் இரண்டு பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி உறுதியளித்தார்.

இவ்வாறான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் கொடிகாமத்தின் பல்வேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.











நாவற்குழியிலும் குடியேறத் தயாராகிறார் புத்தபெருமான் – புதிய விகாரைக்கு ஏற்பாடுகள் மும்முரம்
[ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 07:40 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ]
நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக தாம் 24 மணிநேரமும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

போரினால், வடக்கில் இருந்து வெளியேறியதாக கூறி, நாவற்குழியில் 135 சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியமர்ந்துள்ளன.

இவ்வாறு குடியேறியுள்ள சிங்களவர்களுக்காகவே புதிய விகாரை ஒன்றை நாவற்குழியில் அமைப்பதற்கு யாழ். நாகவிகாரை மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நாகவிகாரையின் விகாராதிபதி மீககஜன்துரே சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ராவய மற்றும் ஹெல உறுமய போன்ற சிங்கள பௌத்தப் பேரினவாத அமைப்புகளும் இந்த விகாரையை அமைப்பதற்கு உதவிகளை வழங்கவுள்ளன.

அத்துடன் நாவற்குழியில் பௌத்த தம்மப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


யாழ்.கைதடிப் பாலத்தில் விபத்து!- இரு இளைஞர்கள் படுகாயம்
வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013
யாழ்ப்பாணம் கைதடிப் பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஒருவர் அவரச சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின் விநியோகப் பணியாளர்கள் இருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் பத்திரிகைகளை விநியோகப் படுத்துவதற்காக சிறியரக வடி வாகனத்தில் சென்று கொண்டிருந்வேளை, வாகனம் கட்டுப்பட்டை இழந்து கைதடிப் பாலத்துடன் மோதியதில் சாரதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் பளையைச் சேர்ந்த சவுந்தாரம் பிரகாஸ் (வயது 21), நாவக்குழியைச் சேர்ந்த எஸ்.தனராஜ் (வயது 23) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.