3.3.06

வாழ்த்துரைகள்

இலங்கை சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தின் யாழ்.மாவட்ட

பங்காளித்துவ முகாமையாளர்

திருமிகு. க.க.மகேந்திரன் அவர்களின் ஆசிச்செய்தி

யாழ் வளநாட்டின் மட்டுவில் பகுதியில் மோகனதாஸ்

சன சமூக நிலையம் புதிய தோற்றம் பெற்று

தக்க கற்றூணாய் நிமிர்ந்தெழுந்துள்ளமையை

எண்ணி பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதனை நிரூபித்துக் காட்டும் வகையில் வறுமைத் தடைக்கல்லை உடைத்து, தமது உழைப்பை படிக் கல்லாய் சமைத்து தம் சமூக வாழ்வு வளம்பெற அர்ப்பணிப்புடன் உழைத்த இக்கிராமத்து இலஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஒரு சமூக வரலாறும் அதன் சாதனைகளும் அந்தக் காலத்துடன் மறந்துவிடும். பிற்காலச்சந்ததிக்கு ஒரு இருண்ட வரலாற்றை விட்டுச் செல்வதாக அமையும். இந்நிலையை மாற்றி தமது முயற்சிகளை ஆவணப்படுத்தும் வகையில் மலர் உருவாக்கப்பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன்.

வயல் நிலங்கள் சூழ்ந்து வளம் பெருகிய பூமியில் இன்று புயல் பரந்து துயர் பெருகிய நிலையிலும் ஊக்கம், உறுதி, உழைப்பு, திடசங்கற்பத்துடன் சன சமூக நிலைய புனரமைப்புக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைவரையும் இந்த வேளையில் பாராட்டுகின்றேன்.

இக்கிராமத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார அபிவிருத்திக்கும் சிறுவர் மேம்பாட்டிற்கும் மோகனதாஸ் சன சமூக நிலையம் எதிர்காலத்தில் ஆரோக்கி யமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது எனது பெருவிருப்பாகும்.

க.க. மகேந்திரன்

பங்காளித்துவ அபிவிருத்தி முகாமையாளர்

யாழ்ப்பாணம் 20.01.2006

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு கே. சிவனேசன் அவர்களின் வாழ்த்துச்செய்தி மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையம் மீண்டும் புத்துயிர் பெற்று புதுப்பொலிவுடன் நிமிர்ந்து காட்சிதருவது கண்டு மனநிறைவுடனான மனமகிழ்வு அடைகிறேன். மிக நீண்டகாலமாக சமூக சேவையை முன்னெடுத்து ஓர் சமூகப் புரட்சியை தனது மக்களுக்கு ஊட்டுவித்து கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் கல்வி மேம்பாட்டுக்கும் அயராது உழைத்த எம் நிறுவனம் அரச பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகி தரைமட்ட மாக்கப்பட்டமையை கண்டு வேதனை அடைந்த நிலையில் இருந்த எமக்கு இன்று அக்கட்டடம் மீளுயிர்பெற்று நிற்பது எம்மனங்களில் மீண்டும் புத்துணர்பை ஊட்டி நிற்பதை உணர்ந்து நிற்கிறோம். எனவே இந்நிறுவனம் தனது பணியினை மீண்டும் தான் சார்ந்த மக்களுக்கு வழங்குவதுடன் பிறக்கப்போகும் தமிழீழத்தில் ஆற்றல் மிக்க நவீன தொழில் நுட்ப முறைகளை அறிந்து நல்லொழுக்கமும் பண்பும் கொண்ட அறிவியல் வளர்ச்சிமிக்க புதிய சமுதாய உருவாக்கத்துக்கு அயராது உழைத்து செயற்பட எல்லாம் வல்ல இறையருளை வேண்டிக் கொள்வதுடன் இக்கட்டடத்தை மீள் புனரமைக்க உதவிய சிறுவர் பதுகாப்பு நிதியம், ஏனைய உதவி புரிந்தோருக்கும் பாராட்டையும் நன்றியையும் கூறுவதில் பெருமை அடைகின்றேன். இந்நிறுவன செயற்பாடு சகல வளங்களையும் பெற்று நலம் மிக்க சேவையாற்றி உயர வேண்டுமென வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒற்றுமையே பலம் தரும்.

மக்கள் சேவையில் உள்ள, கி.சிவநேசன். பா.உ. யார்க்கரு, கரவெட்டி கிழக்கு. கரவெட்டி 15.01.2006

.......................... .................................. ..................................

தென்மராட்சி பிரதேச செயலாளர்

திருமிகு செ. ஸ்ரீநிவாசன் அவர்களின்

ஆசிச்செய்தி

மட்டுவில் கிழக்கு மோகனதாஸ் சன சமூக நிலையம் 1948ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை ஊர் மக்கட்கு அளப்பரிய சேவையாற்றி வருகின்றது. சன சமூக நிலைய நிர்வாகத்தின் கீழ் விளையாட்டுக்கழகம், நூல் நிலையம் என்பன மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றன. தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில் நடைபெறும் வருடாந்த தடகள விளையாட்டு நிகழ்வுகளில் விளையாட்டுக்கழகம் தவறாது பங்குபற்றி வருகின்றது. இக்கழகத்தின் வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடுவதோடு, ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பேணி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தாக்தாகும். கரபந்தாட்டத்தில் கழக வீரர்கள் முன்னணி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2005ம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை ரீதியான போட்டியில் இக்கழக வீரர் ஒருவர் குண்டெறிதலில் முதலிடம் பெற்றமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். அவரை பாராட்டுவத்ற் பெருமகிழ்வடைகிறேன்.

சன சமூக நிலையமானது கல்வியையும் கலையையும் ஊக்குவிக்கும் நோக்குடன் கல்விக்கழகம் ஒன்ரையும் கலைக்கழகம் ஒன்றையும் அமைத்து அவற்றின் வளர்ச்சிக்காக பெருஞ்சேவையாற்றி வருகின்றமையும் பாராட்டுக் குரியதாகும்.

தென்மராட்சியில் 200ம் ஆண்டு இடம்பெற்ற பாரிய யுத்தம் காரணமாக சன சமூக நிலைய கட்டடம் தரைமட்டமானது. இவ்வழிவுக்கு மத்தியிலும் கழகம் வீறுநடைபோடுவது பெருமைக்குரிய தொன்றாகும். அழிவுக்குள்ளான கட்டடம் சிறுவர் பாதுகாப்பு நிதியம். இலங்கை மூலமாகப் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது. புதிய கட்டடத்தின் திறப்புவிழா எதிர்வரும் 25.01.2006 அன்று கோலாகலமாக நடைபெறுவதையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். வாழ்த்துகின்றேன். மேலும் கழகம் பற்பல சேவைபுரிந்து வளர்ந்திடவும், இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

செல்லமுத்து ஸ்ரீநிவாசன்

பிரதேச செயளாளர். தென்மராட்சி. சாவகச்சேரி.

............................ ........................................ ..........................................

சாவகச்சேரி பிரதேச செயளாளர் திருமிகு கே. பாலசந்திரன் அவர்களின்

ஆசிச்செய்தி

சாவகச்சேரி பிரதேச சபையின் நிர்வாக பிரதேசத்துக்குள் உள்ளதும் மட்டுவில் கிழக்கு சாவகச்சேரியில் இயங்கி வருகின்றதுமான மோகனதாஸ் சன சமூக நிலையம் கடந்த கால அழிவுக்குப் பின்னர் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் உதவியூடாக ஒரு அழகிய சன சமூக நிலைய கட்டடஹ்த்டை அமைத்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்ற்து.

மிகக்குறுகிய காலத்துக்குள், மழை கொட்டிக்கொண்டிருந்த காலதிலும் கூட தமது அயராத முயற்சியினால் இதனை அமைத்துக் கொண்டதையும் அவர்களின் விடாமுயற்சியையும் சமூகப்பணியில் கொண்ட அக்கறை யையும் எடுத்துக்காட்டுகின்றது.

எமது பிரதேசத்தில் மக்களின் தேவையறிந்து செவைகளையாற்றிவருகின்ற சன சமூக நிலையங்களில் மோகனதாஸ் சன சமூக நிலையமும் பெயர் பதிந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

மேலும் இவர்களின் சேவை தொடரவும் அதனூடாக மக்கள் தம் வாழ்வில் ஈடேற்றம் பெறவும் மட்டுவில் கிழக்கு மோகனதாஸ் சன சமூக நிலையம் வலர எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ந. பாலச்சந்திரன்

செயலாளர்

சாவகச்சேரி பிரதேச செயலகம். 16.01.2006.

.............................. ...................................... ................................

அறவழிப் போராட்டக்குழுவின் ஆசிச் செய்தி தென்மராட்சிப் பிரதேசத்தின் பழம் பெருமைவாய்ந்த சமூக சேவை அமைப்பான மோகனதாஸ் சன சமூக நிலையத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தின் திறப்புவிழா மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் எமது நிறுவனம் மகிழ்ச்சி கொள்கின்றது. இலங்கை சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து பங்காளி அமைப்பாக சந்திரபுரம் கிராமத்தில் எமது நிறுவனம் சிறுவர்கள் உரிமை பற்றிய களநிலை ஆய்வினை கடந்தவருடம் மேற்கொண்டிருந்தது. அதன் அடிப்படையில் மட்டுவில் கிழக்குக் கிராமத்தில் சில அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்புத் திட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தோம். 2000ஆம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது துவம்சம் செய்யப்பட்ட மோகனதாஸ் சன சமூக நிலையம் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்தமையைக் கவனத்தில் கொண்டு இதன் புனரமைப்புக்கு உதவ வேண்டும் என்ற சிபார்சினை இலங்கை சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்துக்கு முன்வைத்தோம். எமது கோரிக்கையை கவனத்தில் கொண்டு அந்நிறுவனம் 19 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்தது. அதன் பெறுபேறாக அழகிய கட்டடம் மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு இக்கிராமத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளமை சாதனைக்குரியதாகும். மோகனதாஸ் சன சமூக நிலையம் இக்கிராமத்தின் சமூக, பொருளாதார , கல்வி, சுகாதார வளர்ச்சிக்கும் சிறுவர்களின் உளநல மேம்பாட்டுக்கும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என அறவழிப் போராட்டக்குழு வாழ்த்துகின்றது, பிரார்த்திக்கின்றது. மேலும் இக்கட்டடப் புனரமைப்புப் பணியில் அர்ப்பணிப்புடனும் சேவை நோக்குடனும் கிராமப் பற்றுறுதியுடனும் உழைத்த நடப்பு வருட நிலைய நிர்வாகிகளையும் ஏனைய அன்பர்களையும் இவ்வேளையில் நாம் பாராட்டுகின்றோம். எம்.கே. ஜீவகதாஸ் செயலாளர் அறவழிப் போராட்டக்குழு. த.பெ.இல.2, சாவகச்சேரி. 25.01.2006

(புதிய கட்டடத்திறப்புவிழா மலரில் இடம் பெற்ற வாழ்த்துரைகள் இவை)