30.1.07

யாழ்ப்பாணத்தில் அச்சுத்தாள், மை இல்லை

யாழ்ப்பாணத்தில் பத்திரிகை அச்சுத்தாளுக்கும், அச்சடிக்கும் மைக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் விளைவாக இலங்கையின் வட பிரதேசத்தில் உள்ள மக்கள் தகவல்கள், செய்திகளை அறிய முடியாமல் தவிக்கிறார்கள். இப்படி இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இலங்கைத் தூதுவர்களுக்கு சர்வதேசப் பத்திரிகைச் சுதந்திர அமைப்பும், இலங்கைக்கான கருத்துச் சுதந்திர அமைப்பும் பகிரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. இந்த இரண்டு அமைப்புகளிலும் 11 உலகப் பத்திரிகைச் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே வீதித் தொடர்பு இல்லை. கடந்த வருடம் கடும் சண்டை நடைபெற்றபோது கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஒரே வீதி ச்9வீதி மூடப்பட்டுவிட்டது. யாழ்ப்பாணத்துக்கு ஒருசில கப்பல்கள் பொருள்களைக் கொண்டுசெல்கின்றன. அவற்றில் பத்திரிகை அச்சுத் தாளையும் மையையும் ஏற்றி அனுப்ப அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மறுத்து வருகிறார்.இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகைகள் கடும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றன. எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மூன்றும் இப்போது நான்கு பக்கங்களுடன் மட்டும் வெளிவருகின்றன. அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைத்துவிட்டன. உதாரணத்துக்கு உதயன் பத்திரிகையை எடுத்துக்கொண்டால் யாழ்ப்பாணத்தின் அதிக விற்பனையுள்ள பத்திரிகை அது. 20,000 பிரதிகள், 12 பக்கங்களில் உதயன் வெளிவந்து கொண்டிருந்தது. இப்போது நான்கு பக்கங்களில் 7, 500 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படுகின்றன. வெகு விரைவில் பக்கங்கள் இரண்டாகக் குறைக்கப்படலாம். பத்திரிகை அச்சுத்தாளோ மையோ கிடைக்காவிட்டால் உதயன் பத்திரிகையை மூடவேண்டி ஏற்படலாம்.யாழ்ப்பாணத்தில் வானொலி நிலையங்களோ தொலைக்காட்சி நிலையங்களோ இல்லை. பிரதேச மக்கள் பத்திரிகைகள் மூலமே செய்திகளை அறிந்து கொள்கிறார்கள் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.தகவல் கிடைக்கப்பெறுவது ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மிக முக்கியமான தேவை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். பத்திரிகைகள் மூலம் மக்களுக்குத் தகவல் கிடைக்காத பட்சத்தில் மிகைப்படுத்தப்பட்ட வதந்திகள் மக்களைச் சென்றடையும். அவை ஸ்திரமற்ற நிலையையும் வன்செயல்களையும் ஏற்படுத்தும்.மக்களுக்குத் தகவல்களைக் கொடுக்கும் தமது முக்கிய பணியை யாழ்ப்பாணப் பத்திரிகைகள் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் அச்சுத்தாளும் மையும் வழங்கப்படுவதற்குத் தங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் தாங்கள் செய்யவேண்டும் என்று தங்களை வேண்டிக்கொள்கிறோம். குறிப்பாக யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படும் பொருள்களில் பத்திரிகை அச்சுத்தாளையும் மையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.தங்களால் முடிந்த விரைவில் எங்களுடன் தொடர்புகொள்வீர்கள் என்று எதிர்பார்த்து இருக்கிறோம்.இப்படி இரண்டு சுதந்திரப் பத்திரிகை அமைப்புகளும் உதவி வழங்கும் நாடுகளின் தூதுவர்களுக்குத் தாம் அனுப்பியுள்ள பகிரங்கக் கடிதத்தில் தெரிவித்திருக்கின்றன.
தகவல்> சுடரொளி