12.3.08

மாமனிதர் சிவனேசன்




அண்மையில் சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு கே. சிவனேசன் அவர்கள்.

மாமனிதராக விடுதலைப்புலிகளின் தலைவரால் உயர் மதிப்பளிக்கப்பட்ட திரு கே. சிவனேசன் அவர்கள் இரு ஆண்டுகளின் முன்னர் எமது
கிராமத்தின் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின் மலருக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியினை மாமனிதரின் நினைவாக இங்கு மீள்பிரசுரம் செய்கிறோம்.

மாமனிதருக்கு வீரவணக்கங்கள்!
-0-0-0-0-0-0-0-



யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

திரு கே. சிவனேசன் அவர்களின்


வாழ்த்துச்செய்தி

மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையம் மீண்டும் புத்துயிர் பெற்று புதுப்பொலிவுடன் நிமிர்ந்து காட்சிதருவது கண்டு மனநிறைவுடனான மனமகிழ்வு அடைகிறேன். மிக நீண்டகாலமாக சமூக சேவையை முன்னெடுத்து ஓர் சமூகப் புரட்சியை தனது மக்களுக்கு ஊட்டுவித்து கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் கல்வி மேம்பாட்டுக்கும் அயராது உழைத்த எம் நிறுவனம் அரச பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகி தரைமட்ட மாக்கப்பட்டமையை கண்டு வேதனை அடைந்த நிலையில் இருந்த எமக்கு இன்று அக்கட்டடம் மீளுயிர்பெற்று நிற்பது எம்மனங்களில் மீண்டும் புத்துணர்பை ஊட்டி நிற்பதை உணர்ந்து நிற்கிறோம். எனவே இந்நிறுவனம் தனது பணியினை மீண்டும் தான் சார்ந்த மக்களுக்கு வழங்குவதுடன் பிறக்கப்போகும் தமிழீழத்தில் ஆற்றல் மிக்க நவீன தொழில் நுட்ப முறைகளை அறிந்து நல்லொழுக்கமும் பண்பும் கொண்ட அறிவியல் வளர்ச்சிமிக்க புதிய சமுதாய உருவாக்கத்துக்கு அயராது உழைத்து செயற்பட எல்லாம் வல்ல இறையருளை வேண்டிக் கொள்வதுடன் இக்கட்டடத்தை மீள் புனரமைக்க உதவிய சிறுவர் பதுகாப்பு நிதியம், ஏனைய உதவி புரிந்தோருக்கும் பாராட்டையும் நன்றியையும் கூறுவதில் பெருமை அடைகின்றேன். இந்நிறுவன செயற்பாடு சகல வளங்களையும் பெற்று நலம் மிக்க சேவையாற்றி உயர வேண்டுமென வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒற்றுமையே பலம் தரும்.
மக்கள் சேவையில் உள்ள,

கி.சிவநேசன். பா.உ.

யார்க்கரு, கரவெட்டி கிழக்கு. கரவெட்டி 15.01.2006