26.8.08

ஈழத்தின் நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் அவர்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலி!



சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றியிருந்தவருமான திரு. தா. இராமலிங்கம் அவர்கள் காலமான செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவராக தா.இராமலிங்கம் திகழ்ந்தார். மீசாலையை வதிவிடமாகக்கொண்டிருந்த இவர் இடம் பெயர்ந்து மல்லாவியில் தனது இளையமகனது குடும்பத்தாரின் பராமரிப்பில் தனது துணையாருடன் வாழ்ந்து வந்தார். மல்லாவி துணுக்காய் பகுதிகள் அரசபடைகளால் சுற்றிவளைக்கப்படும் வேளையில் கிளிநொச்சிக்குப் இடம்பெயர்ந்து வந்த சில தினங்களில் சுகவீனமுற்று இயற்கை எய்தினார்.
தனது ஆசிரியப்பணியில் கால்நூற்றாண்டு காலத்தை மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த அவர் கல்விப்பணியிலிருந்து 1993ல் இளைப்பாறிக்கொண்டார்.

இராமலிங்கம் அவர்களுடைய முதலாவது கவிதைத் தொகுதியான புதுமெய்க் கவிதைகள் 1964இல் வெளியானது. அடுத்த வருடமான 1965இல் காணிக்கை என்ற அவருடைய இரண்டாவது தொகுப்பு வெளியானது. தமிழ் சமூகத்துள் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் போலியான சம்பிரதாயங்களையும் மிகுந்த எள்ளலோடு கவிதையாக்கியவர்.

தமிழ்த் தேசியத்தின் மீது அளவற்ற பற்றுதலுடன் செயலாற்றி, எழுதிவந்த இராமலிங்கம் அவர்களது மறைவு ஈழத்தமிழ் உலகுக்கும், இலக்கியத்துக்கும் பேரிழப்பு ஆகும். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நவீன கவிதைகளூடாக இலக்கியப்பணியாற்றி வந்த இராமலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம்!

அவரின் நினைவாக அவரது புகழ்பெற்ற அகால மரணங்கள் என்ற கவிதையை இங்கே மீள்பதிகின்றோம்.



அகால மரணங்கள்


வெள்ளென வெல்லாம்
வெறிச்சோடிக் கிடந்து
வெறுஞ் சாம்பல் மேடாய்த்தான்
தரிசனம் தந்தது.

மதியம் திரும்பியதும்
கட்டை அடுக்கிவிட்டுக்
காத்துக் கிடக்கின்றார்.

நீறு பூத்த குறங் கொள்ளிக் கட்டைகள்
காற்று ஊத கண் முழித்துப் பார்க்குது!

இப்ப வெல்லாம்
அகால மரணந்தானே அதிகம்.
ஒருவேளை
கைகூடாத் திருமணத்தால்
காதலர் தற்கொலையோ
சாதி மத பேதம் தடுத்த
கொடுமையிதோ!

அதோ பார்!
துண்டுப் பிரசுரம் தெருவெல்லாம் ஒட்டி
தண்டிகை காவிச் சனம் திரண்டு வருகுது

‘குண்டு துளைத்துக்
குருதி குளிப்பாட்டிச்
சவமாகச் சாய்ந்தாலும்
சாகாமல் வாழுகிறாய்
விடுதலை வேள்வியிலே
உடல் தீக்கு ஈந்துவிட்டாய்…’

ஒரு கோடி சிந்தனைகள்
உள்ளத்தில் அலைமோத
மீதியைநான் படிக்கவில்லை.
இப்பவெல்லாம்
அகால மரணந்தானே அதிகம்.


திரு இராமலிங்கம் அவர்களின் இரு கவிதைத் தொகுப்புகளின் இணைய முகவரிகள் கீழே......

புதுமெய்க் கவிதைகள்
http://noolaham.net/project/01/61/61.htm
காணிக்கை
http://noolaham.net/project/01/62/62.htm


உறவுகள் தந்த அறிவிப்பு(உதயன் நாளிதழ்)








எளிமைமிகு படைப்பாளி எங்கள் கவிஞர்.


நான் மாணவனாக இருந்த காலங்களில் திரு. தா. இராமலிங்கம் அவர்களது சில கவிதைகளைப் படித்தமை காரணமாக ஒரு கவிஞர் என்றவகையில் என்னால் அறியப்பட்டவராக அவர் இருந்தார். எனது மாணவப்பருவத்திலேயே அவரது இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துவிட்டிருந்தன. தாயகத்தில் அவர் எனது அயலூரான கல்வயலில் பிறந்து வளர்ந்தவர். ஆயினும் அவரை நான் நேர்முகமாகச் சந்தித்திருக்கவில்லை. எங்களது முதல் சந்திப்பு மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்திற்கு நான் மாற்றம் பெற்றுச் சென்ற எண்பதுகளின் ஆரம்பத்தில் நிகழ்ந்தது. ஒன்பது ஆண்டுகள் வரையில் அவருடன் ஆசிரியப்பணியினை அங்கு நான் மேற்கொண்டிருந்தேன். எனதிருபதாண்டுகால ஆசிரிய பணியில் எனது மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மனிதராக, அதிபராக அவரை இன்றுவரை என் நினைவுகளில் கொண்டிருக்கின்றேன். ஒரு சிறந்த ஆசிரியராக, தகை சார்ந்த நிர்வாகியாக, சக ஆசிரியர்களுடன் மிக நல்லுறவு கொண்ட அதிபராக அவர் விளங்கினார். அவரது எளிமையான வாழ்க்கைமுறை அவர் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் நிலைபெற்றிருந்தது. நடையுடை பாவனையிலும் உரையிலும் எழுத்திலும் கவிதைவரிகளிலும் எளிமையான, இதமான நடைமுறையினை அவர் பேணி வந்தார்.

திரு. இராமலிங்கம் அவர்களின் கவிதைகளை படித்திருந்தமையினால் மிகப் பரிச்சயமான நண்பர் போன்ற உணர்வு முதலில் சந்தித்த போதில் மேலோங்கியிருந்தது. பின்னாளில் அவரது கவிதைகளை எனது ஓய்வு நேரங்களில் தட்டச்சில் பல பிரதிகளாகப் பொறித்து ஆவணப்படுத்தும் பணியினையும் செய்திருந்தேனாகையால் அவரது கவிதைகளில் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தேன். அவரது கவிதைகளின் மீது ஆர்வம் கொண்ட ஒரு வாசகன் என்பதனைத் தவிர அவரது கவிதைகள் பற்றி கருத்துச்சொல்ல, விமர்சனம் எழுத எனக்குப் பக்குவம் போதாது. ஆயினும் அவரின் கவிதைகள் பற்றிய எனது சில மனப்பதிவுகளையும் கிளர்ச்சிகளையும் சொல்வதன் மூலமாக அவர் பற்றிய என் புரிதல்களை ஒருசில வரிகளில் வெளிப்படுத்த விரும்புகிறேன். பாரம்பரிய கவிதை இலக்கணங்களுக்குள் அகப்படாமல் சமுதாயம் சார்ந்த தன் பார்வைகளையும் சமூகத்தின் போலித்தனங்களையும் எளிமையான வார்த்தைகளில் நவீன கவிதைகளாக அவர் வடித்தார். ஒருவர் தனது வாழ்வில் இளமைப்பருவத்திலிருந்து முதுமைவரை பலவிதமான சமூகம் சார்ந்த அரசியல் சார்ந்த மாற்றங்களை காண்பது வழக்கமானது. அமரர் அவர்களும் தான் அவ்வப்போது
எதிர்கொண்ட மாற்றங்களை உள்வாங்கி, அவை அவருள் ஏற்படுத்திய சிந்தனைகளை கவிதைகளாக பிரதிபலித்தார். மாற்றங்கள் வேண்டும் என்கிற அவா அவரின் வரிகளில் இளையோடுகின்றது. மலைகளை, வனப்புமிகு காட்சிகளை மங்கையரை என கற்பனை விஞ்சிய, யதார்த்தத்துக்கு பொருத்தமற்ற ரசனைகளில் திரு. இராமலிங்கம் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. தமிழரின் வாழ்வியலின் பிரச்சனைகளை உயிர்ப்புடன் அணுகியதால் அவரின் கவிதைவரிகள் எம்முள் ஆழமான உணர்வுகளை உருவாக்குகின்றன. அவரது வரிகளை தட்டச்சிடுகையில் அவை சொல்லும் அர்த்தங்களால் பலதடவை செயலற்று இருந்துள்ளேன். சிங்கள இராணுவத்தால் சுடப்பட்ட ஒரு தமிழ்மகன் உயிர்விடும் தருணத்தில் தண்ணீருக்காக ஓலமிட்டபோது மனித நேயமிக்க இன்னொரு சிங்கள் இராணுவத்தினன் தன் இரும்பு தொப்பிக்குள் நீரேந்தி வந்து பருகக்கொடுத்த செய்தியைப்படித்த கவிஞர் எழுதிய கவிதையின் சாரம் இன்றுவரை என்னால் மறக்கப்பட இயலாததாக இருக்கின்றது.

தமிழ்மக்களின் விடிவுக்காக தமிழ்த்தேசியத்தின் மீது அவர்கொண்டிருந்த நம்பிக்கையை கவிதைகளில் மட்டுமன்றி செயல்வழிகளில் அவர் வெளிப்படுத்தினார். பாடசாலை சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பல்வேறுவழிகளில் தமிழ்த்தேசியத்தின் பாலான பல ஒத்துழைப்புக்களை அவர் தயக்கமின்றி வழங்கினார். அவ்வகை சார்ந்த எனது செயற்பாடுகளுக்கு அவர் மிகுந்த ஒத்தாசைகள் புரிந்தார்.

ஏறத்தாழ கால்நூற்றாண்டுகாலம் வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை பல நிலைகளில் வழங்கிய அந்த பெருமனிதர் இயற்கை எய்தியமை பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் சுற்றிவளைக்கப்படும் வன்னிமண்ணில். தற்போதைய இடப்பெயர்வு அவலங்களின் போதில் மல்லாவியிலிருந்து துணைவியார், இளையமகனாகிய மருத்துவக்கலாநிதி கதிர்ச்செல்வன் குடும்பத்தினருடன் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தவேளையில் அவர் இயற்கை எய்தினார். அமரரின் உயரிய சேவையால் வளம்பெற்ற கல்விநிலையமும் தென்மராட்சி மீசாலைச் சமூகமும் அவருக்கு நேர்முகமாகத் தமது அஞ்சலியை செலுத்தக்கூட இயலாதவாறு நிலைமைகள் அமைந்து போயின என்பது கவலையை அதிகரிக்கின்றது.

இராமலிங்கம் அவர்கள் மக்களை நேசித்த ஓர் உன்னத படைப்பாளி. அவர் மறக்கப்பட முடியாதவர். தன் சேவைகள் வாயிலாக தென்மராட்சி மக்களின், மாணவர்களின் உள்ளங்களிலும் எழுதிய நவீன கவிதைகள் ஊடாக ஈழத்தமிழர் நெஞ்சங்களிலும்என்றும் நிலைத்திருப்பார். கனத்த மனவுணர்வுகளுடன் அவரது கவிதை ஒன்றில் இளைஞர்களுக்கு அவர்சொன்ன சிலவரிகளை இங்கே பதிவதுடன் இந்நினைவுக் குறிப்பினை முடிக்கின்றேன்.


இளைஞர்களே எச்சரிக்கை
புயல் எழுந்து வீசிடலாம்
உயர்மரங்கள் முறிந்திடலாம்
குடியிருக்கும் வீட்டுக்
கூரை பறந்திடலாம்
வீணாகச் சக்தியினை
விழலுக்கிறையாமல்
வாருங்கள் இளைஞர்களே
வந்தொன்று சேருங்கள்!
காற்றடிக்கும் காலமிது
கைவிளக்கை நம்பி
இனி இருட்டில் போகாதீர் !


க.பொன்னுத்துரை
கனோவர். யேர்மனி
23.09.2008