1.9.12

ஊரும் அயலும் செப்ரெம்பர் 2012

குடும்பஸ்தரை ஏமாற்றிய சிறுவர்கள்; மதுவைக் குடித்து மயங்கி பறிகொடுத்தார் உடைமைகளை

மறைவிடம் ஒன்றில் நின்று மதுபானம் வாங்கித் தருமாறு சிறுவர்கள் கோரிய நிலையில் அவற்றை வாங்கிக் கொடுத்தவர் உடைமைகளை இழந்தார். இந்தச் சம்பவம் அண்மையில் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் இடம்பெற்றது.

வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவரிடம் மறைவிடம் ஒன்றில் நின்ற சிறுவர்கள் தமக்கு மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர்.

 அவர்களிடம் பணம் பெற்று மதுபானம் வாங்கிக் கொடுத்தபோது தம்முடன் குடிக்க வருமாறு சிறுவர்கள் கோரியுள்ளனர். இவர்களின் "அன்புத் தொல்லையை" மீறமுடியாமல் அவர்கள் கொடுத்த மதுவை அருந்திய சில நிமிட நேரத்தில் குறித்த நபர் மயக்கமானார்.

 மறுநாள் காலையில் அவ்வழியே சென்ற ஒருவர் அவரைத் தட்டி எழுப்பியபோதுதான் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் ஆகியவை திருடப்பட்டமை தெரியவந்தது.

 மதுவின் தாக்கத்தால் பல மணிநேரம் கண்விழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சாவகச்சேரி வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டது.

நாவற்குழி வரை வந்தது லக்­ஷபானா மின்சாரம்; நல்லூர் ஆலயத்துக்கும் விநியோகம்
news
 ஏ9 வீதியூடாக  நாவற்குழி  வரைக்கும் லக்ஷபானா  மின்சாரம் நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை  தொடக்கம்  பரீட்சார்த்தமாகக்   கொண்டு  வரப்பட்டதாக  இலங்கை  மின்சார சபையின்  அதிகாரி   ஒருவர்   தெரிவித்தார். 
இன்று  கிளிநொச்சியில் ஜனாபதியினால்
ஆரம்பித்து வைக்கப்படும் இந்த  லக்ஷபான   மின் விநியோகத்திட்டதில் இருந்து  10 மெகா வாற்ஸ் மின்சாரம் ஏ9  வீதியூடாக   யாழ்ப்பாணம்  கொண்டு  வரப்படவுள்ளது. 
இந்த  மின்சாரம்  தென்மராட்சி மற்றும் வடமராட்சி   பிரதேசங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டது.  நேற்று  முன்தினம்  இரவு  நாவற்குழி  வரை கொண்டுவரப்பட்ட இந்த  மின்சாரம்  அங்கு  பரீட்சார்த்தமாக  விநியோகிக்கப்படுகிறது. 
இதேவேளை  ஜனாதிபதியால்  இன்று  கிளிநொச்சியில்  ஆரம்பித்து  வைக்கப்படும்   லக்ஷபானா மின்சாரத்தை  சுப நேரத்தில்  நல்லூர் கந்தசாமி கோயிலுக்கும் வழங்குவதற்கு   ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டிருப்பதாக  மின்சார  சபை வட்டாரங்கள்  தெரிவித்தன. 
                     

(25.9.12 உதயன்)
சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் புற்றுநோய் சிகிச்சை தேவை; யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டு இடை நிறுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு நோயாளர்கள் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரைக் கோரியுள்ளனர்.

 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் தென்மராட்சி பிரதேச மக்களுடன் பச்சிலைப்பள்ளி, வடமராட்சி கிழக்கு, பூநகரி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த நோயாளர்களும் சிகிச்சை பெற்று வந்தனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெற்ற சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணரின் இல்லத்தின் மீது இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இயங்காது போயுள்ளது. இந்தச் சிகிச்சைப் பிரிவில் கலந்து கொண்ட நோயாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை மேல்மாடிக் கட்டடத்தில் நடைபெறும் சிகிச்சைப் பிரிவுக்கு பெரும் சிரமங்களின் மத்தியில் சென்று வருகின்றனர். இந்த நோயாளர்கள் வாகனங்களில் செல்ல முடியாததால் ஓட்டோவில் உதவியாளர் ஒருவருடன் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரவிரயமும் பெரும் நிதிப் பிரச்சினை எதிர்நோக்கப்படுகிறது. 

 இந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ள சாவகச்சேரி வைத்தியசாலைப் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நோயளர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தூர இடங்களிலிருந்து வருவோர் சொல்லொணாத சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கைதடியிலிருந்து மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் பளையில் விபத்து: 19 பேர் காயம்

[ ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2012, 04:58.48 AM GMT ]

 யாழ். கைதடியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டு முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முற்பகல் 9 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகமாகச் சென்ற பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக பஸ்ஸில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். தெய்வாதீனமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

கைதடி வளர்மதி கல்விக் கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறித்த பஸ்ஸில் சென்றுள்ளனர்.பஸ் விகத்துக்குள்ளானதும், காயப்பட்ட 15 பேர் உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். ஏனையவர்கள் கைதடிக்குத் திரும்பிச் சென்றபோதும் அவர்களில் நான்குபேர் திடீர் சுகவீனமுற்றதனால் நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பஸ் சாரதியைப் பொலிஸார் தடுத்து வைத்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(TWin)