1.11.12

ஊரும் அயலும் நவம்பர் 2012

இருவருக்கு டெங்கு
தென்மராட்சி நவ.30

மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் இருவர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர் என இனக்காணப்பட்டதையடுத்து அந்தப்பகுதியில் டெங்கு ஒழிப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தப்பகுதியில் சாவகச்சேரி பிரதேச சபையின் பங்களிப்புடன் புகையூட்டல் பணிகள் இடம்பெற்றுவருவதுடன் வீடுகள் தோறும் பரிசோதனைகளும்  விழிப்புணர்வுச் செயற்பாடுகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சிவில் பாதுகாப்பு குழுக்களை கிராமிய ரீதியில் பலப்படுத்துக; தென்மராட்சிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கோரிக்கை
news
 தென்மராட்சிப் பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகளில் தொய்வுநிலை காணப்படுவதால் கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுக்களின் சேவையைப் பலப்படுத்தி கிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

இவ்வாறு தென்மராட்சிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிவில் பாதுகாப்புக் குழுக்களைக் கேட்டுள்ளார். தென்மராட்சிப் பிரதேசத்தில் குற்றச் செயல்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மீண்டும் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.
பிரதேசத்தில் பொலிஸார், கிராம அலுவலர்கள், கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுவினர், பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்பால் குற்றச் செயல்கள் பெருமளவில் குறைந்திருந்தன.
அண்மைக் காலமாக பிரதேசத்தில் குற்றச் செயல்கள் மெல்ல மெல்லத் தலை காட்டத் தொடங்கியுள்ளன. இதற்குக் கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுவினரின் செயற்பாடுகள் குறைந்ததே காரணம் என்று கருதுகிறேன்.
கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து இரவு, பகல் மக்களதும் கிராமங்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் குற்றச் செயல்கள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத் தொடரில் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.    (29.11.12 Uthayan)               

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு வரணி வடக்குப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கணபதிப்பிள்ளை உதயசூரியன் (வயது40) என்னும் குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டது. கொடிகாமம் பொலிஸார் நேற்று சனிக்கிழமை இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிவானிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். நீதிவானின் பணிப்பின்பேரில் கொடிகாமம் பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்குமரன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிமூலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.(25.11.12)
யாழ்ப்பாணம் - கொடிகாமத்துக்கான காலை சேவையை நிறுத்திய இ.போ.ச.; அரச பணியாளர், மாணவர்கள் நெருக்கடியில்
news
யாழ்.பஸ் நிலையத்திலிருந்து கொடிகாமத்துக்கான பேரூந்தின் காலைச் சேவை நிறுத்தப்பட்டதால் தென்மராட்சிப் பிரதேச அலுவலகங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உரிய நேரத்துக்குக் கடமைக்குச் சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர் காலை 8 மணிக்கு யாழ். பஸ் நிலையத்திலிருந்து கொடிகாமத்துக்கு சேவை இடம்பெற்றது.
இந்தச் சேவையை யாழ்ப்பாணத்தில் இருந்து கைதடி, சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பிரதேச அலுவலகங்களில் பணிபுரிவோர் பருவகால பயணச் சீட்டைப் பெற்றுப் பயணத்தை மேற்கொண்டு வந்தனர். 
இந்தச் சேவையில் நாவற்குழி, கைதடி, நுணாவில், சாவகச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் பணியாளர்கள் பயணித்தனர். தற்போது இந்தச் சேவை நிறுத்தப்பட்டால் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தமது கடமைகளுக்குச் செல்வதற்குப் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையான தனியார் பஸ்கள் புறப்படுகின்ற போதிலும் கொடிகாமம் வரை செல்லும் அரச பணியாளர்களை ஏற்றிச் செல்ல மறுக்கின்றனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமத்துக்கு புறப்படும் தனியார் சிற்றூர்திகளும் பஸ் நிலையத்திலேயே அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி வருவதால் அவற்றிலும் பயணிக்க முடியாத நிலை அரச பணியாளர்களுக்கு ஏற்படுகின்றது.
இந்த நிலையில் வார நாள்களில் காலை 7.30 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் ஒரு சேவையை யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் வரை நடத்துமாறு இ.போ.ச. வடமாகாண பொதுமுகாமையாளரை தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள அரச, வங்கி கூட்டுறவு அலுவலகங்களில் பணிபுரிவோர் கேட்டுள்ளனர்.21.11.12.U
70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவருக்கு பெறுபேற்றுச் சான்று

 தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் கடந்த ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 70 இற்கு மேல்புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் முகமாக இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் கல்வி வலய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் அந்தந்தப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாடசாலைகளில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் நிகழ்வுகளில் அதிபர்களால் மாணவர்களுக்கு இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

பரீட்சையில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வை பாடசாலைகளில் பாராட்டு விழாவாக நடத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(18.11.12உதயன்)

மட்டுவில் வடக்கு அ.த.க. பாடசாலையில் 
இடம்பெற்ற உலககைகழுவுதல் நிகழ்வின்போது
மாணவர்களின் செயற்பாட்டை  பாடசாலை அதிபர்
ச. கிருஷ்ணன், பிரிவு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்
தவசிநேசன் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிடுகின்றனர்.



மதுவால் வெளிப்பட்ட நண்பனின் சுயரூபம்
By Priyarasa, (Virakesari)
2012-11-06 11:57:25
நண்பர்கள் இருவர் மதுபானச் சாலையில் மது அருந்திவிட்டு ஒருவருடைய மோதிரத்தை மற்றவர் திருடிச்சென்ற சம்பவம் ஒன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நண்பர்கள் இருவர் சாவகச்சேரி பகுதியில் உள்ள மதுபான சாலையொன்றுக்கு சென்று மது அருந்தியுள்ளனர். இதனையடுத்து இருவரில் ஒருவர் நிதானம் இழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதன்போது உதவிசெய்யும் நோக்கில்; நிதானம் இழந்தவரின் கையில் இருந்த சுமார் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான மோதிரத்தை மற்றைய நபர் திருடிச் சென்றுள்ளார்.

சாவகச்சேரி பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் திருடப்பட்ட மோதிரத்தையும் திரும்பக் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது விளக்கமறியலில் வைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி மீதான வன்புணர்வு வழக்கு;
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு
news
பதின்ம வயதுச் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்தமை தொடர்பான வழக்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக யாழ்.நீதிமன்று அனுப்பி வைத்துள்ளது.
இந்த வழக்கு யாழ்.நீதிமன்றில் நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது.
2009ஆம் ஆண்டு இந்த வன்புணர்வுச் சம்பவம் இடம் பெற்றது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பதின்ம வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டார்.
அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்தேகநபர்கள், சிறுமியின் அண்ணனுடைய நண்பர்கள் என்று தம்மை அறிமுகம் செய்து கொண்டனர். அண்ணன் அழைத்துவரச் சொன்னதாகப் பொய்கூறி சிறுமியை காரைநகருக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்றுள்ளனர்.
  
அங்கு வீடொன்றில் வைத்து மயக்க மருந்து கலந்த தேநீரை குடிக்கக் கொடுத்துள்ளனர். அதனைக் குடித்த சிறுமி மயக்கமடைந்து விட்டார். மறுநாள் காலையில் கண்விழித்த போதே தான் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதை சிறுமி உணர்ந்து கொண்டாள். இந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
  
சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. அது தொடர்பில் யாழ்.நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகளின் போது இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறுமியினுடைய அண்ணனுக்கும் தெரியாது என்று தெரியவந்தது.
பின்னர் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதன் போது சிறுமி தன்னை அழைத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டினார்.  
நீதிமன்றில் வழக்கு விசாரணை தொடர்ந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணி ஜொனி மதுரநாயகம் ஊடாக மன்றில் முன்னிலையாகினர். 
இந்நிலையிலேயே அந்த வழக்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. (Uthayan 4.11.12)