30.04.2006 மட்டுவில் நுணாவில் வீதியில் இன்று சிரமதானத்துக்கு ஏற்பாடு சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மட்டுவில் நுணாவில் எல்லை வீதி, அப்பகுதி மக்களால் இன்று சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்படவுள்ளது.டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி சாவகச்சேரி நகர சபையினரும் சாவகச்சேரி சுகாதாரப் பகுதியினரும் விடுத்தவேண்டுகோளை அடுத்த இவ்வீதி சிரம தானம் மூலம் துப்புரவு செய்யப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சிரமதானத்தின்போது சேகரிக்கப் படும் கழிவுகளை நகரசபையினர் உழவு இயந்திரம் மூலம் அப்புறப்படுத் தவுள்ளதாகவும் தெரியப்படுத்தப்பட் டது. 27.04.2006 சாவகச்சேரியில் இளைஞர் சுட்டுக்கொலை! சாவகச்சேரி மீன்சந்தையருகில் நேற்றுமுற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரி ழந்தார்.கனகம்புளியடியைச் சேர்ந்தவரும் வாகனத்தரகருமான ராஜு (வயது 25) என்பவரே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டார் என்று முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.சாவகச்சேரிச் சந்தைப் பகுதியை நேற்றுக்காலை சுற்றிவளைத்த இராணு வத்தினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்கள் 7 பேரை அவர்கள் தடுத்துவைத்திருந்தனர். அவர்களில் இந்த இளைஞரும் ஒருவராவார்.விசாரணையின் பின்னர் 7 பேரையும் படையினர் செல்ல அனுமதித்தனர். அவர் கள் தத்தமது இடங்களுக்கு புறப்பட்டபோதே இந்த இளைஞர் மீன் சந்தையருகில் வைத் துச் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
26.04.2006 வீடமைப்புத் திட்டத் தெரிவில்குறைபாடெனக்கூறி ஆர்ப்பாட்டம் தென்மராட்சிப் பிரதேச செயலகம் முன்பாக பெருமளவு மக்கள் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள் ளப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாகவெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படாத மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வாகனங்களில் வந்த பொதுமக்கள் இத்திட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்ட கணனி இயந்திர தெரிவினை உடனடியாக நிறுத்தி குழுக்களை நியமித்து அதன் மூலம் தகுதியானவர்களைத் தெரிவுசெய்யுமாறு கோரிக்கைவிடுத்தனர்.பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் பிரதேச செயலரிடம் மகஜரையும் கையளித்தனர்.இதேவேளை கைதடி, கோவில்குடியிருப்பு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த மக்கள் கிராம அலுவலரின் அலுவலகங்களை இயங்கவிடாமல் மறியற்போராட் டத்தில் ஈடுபட்டனர்.போராட்ட முடிவில் யாழ். அரச அதிபருக்கு மகஜர் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரியில்சடலம் மீட்பு! சாவகச்சேரி கல்வயல் நாவற்பள்ளம் பகுதியில் உள்ள பற்றைப் பகுதிக்குள் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
25.04.2006 சரசாலை, வேம்பிராயில் நேற்றிரவு பதற்றம்பயணிகள் சென்ற மினிபஸ்ஸும் தடுத்துவைப்பு தென்மராட்சிப் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களால் சரசாலை, வேம்பிராய், மட்டுவில் பகுதிகளில் நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. புத்தூர் வேம்பிராய் வீதியில் சரசாலை ஏற்றத்தடிப் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் தொடர் வேட்டுச் சத்தங்கள் கேட்டன.வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து மறைந்திருந்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது என்றும் இதில் படையினர் தரப்பில் ஒருவர் உயிரிழக்கவும், மற்றொருவர் காயமடையவும் நேரிட்டது என்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவித்தன. இணையத் தளங்களிலும் இது குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தன.படையினர் மீதான தாக்குதலை அடுத்து வேம்பிராய், சரசாலை பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டது. வீடு வீடாகச் சென்ற படையினர் பொதுமக்களை தீவிர சோதனைக்குட்படுத்தினர் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்னிரவு 7 மணியளவில் கனகன்புளியடிச் சந்தியூடாகப் பயணித்த பயணிகள் மினிபஸ் ஒன்று அப் பகுதியில் கடமையில் ஈடுட்டிருந்த படையினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக் கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட பஸ்ஸை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பயணிகள் இருவர் காயமடைந்தனர் என்றும் இணையத்தளச் செய்தி ஒன்று கூறியது.எனினும், இந்தச் சம்பவத்தில் காயமடைந் தவர்கள் எவராவது சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிந்துகொள்ள சாவகச்சேரி ஆஸ்பத்திரியுடன் நேற்று முன்னிரவு முதல் நள்ளிரவுக்குப் பின்னரும் பல தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். எனினும், தொடர்பு கிடைக்காததால் அதனை உறுதிப்படுத்தமுடிய வில்லை.இதேவேளை மேற்படி சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கஜேந்திரன் எம்.பி:""முற்கொண்டு கிடைத்த தகவலின் அடிப் படையில் நேற்றிரவு 11.30 மணியளவில் யாழ். மாவட்ட படைத் தளபதியுடன் தொடர்புகொண்டு பேசினேன். அதற்கு அவர், குறிப்பிட்ட மினிபஸ்ஸில் இருந்து படையினரின் பதுங்கு குழியை நோக்கி துப்பாக் கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது என்றும் இதனையடுத்து சம்பந்தப்பட்ட மினி பஸ்ஸைமறித்த படையினர், பொலீஸாரின் உதவியுடன் விசாரணைகளை நடத்திவருகின்றனர் என்றும் தம்மிடம் தெரிவித்ததாக கஜேந்திரன் எம்.பி. நேற்றிரவு உதயனுக்குத் தெரிவித்தார். 22.04.2006 மட்டுவிலில் ஆயுதங்களைபடையினர் மீட்டனராம்! இரகசிய தகவலொன்றையடுத்து யாழ்ப்பாணம், மட்டுவிலில் மாவீரர் குடும்பமொன்று வசிக்கும் வீட்டை சோதனையிட்ட படையினர் பெருந்தொகையான ஆயுதங்களை அங்கிருந்து கைப்பற்றியிருக்கின்றனர் என இராணுவத் தலைமையகம் நேற்று அறிவித் திருக்கிறது.நேற்றுமுன்தினம் இரவு நடத்தப்பட்ட இந்தத் தேடுதலின்போது 12 கிளைமோர் குண்டுகளும், 39 கைக்குண்டுகளும், 50 டெட்டனேட்டர்களும் ஆள்களுக்கெதிரான பத்து கண்ணிவெடிகளும், 8 ரொக்கட் கிரனேட்டுகளும், 110 ரி.என்.ரி. வெடிமருந்துக் குச்சிகளும், 5 ரி56 ரக துப்பாக்கிகளும் இவற்றுக்குரிய 1,400 ரவைகளும், இராணுவ சீருடைகளும் மேலும் பலவெடிமருந்துப்பொருள்களும்கைப்பற்றப்பட்டனஎனஇராணுவத்தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சிவிலியன் ஒருவர் கொடுத்த தகவலொன்றின் அடிப்படையில் கோப்பாயிலிருந்து பெருமளவு கிளைமோர் குண்டுகள் கைப்பற்றப்பட்டன எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளது. 21.04.2006 வீட்டுத் திட்டப் பயனாளிகள் பட்டியல்தென்மராட்சியில் மக்கள் பார்வைக்கு தென்மராட்சிப் பிரதேசத்தில் உலக வங்கி யின் நிதிஉதவியுடன் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட 618 பயனாளிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்திலும், இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் பொதுஇடங்களிலும், பயனாளி களின் பெயர்ப்பட்டியல் பார்வைக்கு வைக் கப்பட்டுள்ளன.வீட்டுத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன் பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு பிர தேச செயலர் செ.ஸ்ரீநிவாசன் அறிவித்துள் ளார். வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட வுள்ள கிராம அலுவலர் பிரிவுகள் ரீதியாக இத் திட்டத்திற்கு கணனி மூலம் தெரிவுசெய் யப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை வரு மாறு:வரணி இயற்றாலை 101, மந்துவில் மேற்கு 69, கைதடி, நூணாவில் 50, கைதடி, நாவற்குளி 44, சரசாலை தெற்கு 41, வெள்ளாம் போக்கட்டி 40, குடமியன் 34, இடைக்குறிச்சி 29, தாவளை, இயற் றாலை 29, கொடிகாமம் தெற்கு26, மிருசு வில் வடக்கு 22, கொடிகாமம் வடக்கு 19, மந்துவில் கிழக்கு 19, மந்துவில் வடக்கு 18, மிருசுவில் தெற்கு 16, கல் வயல் 14, கொடிகாமம் மத்தி 12, மட்டு வில் வடக்கு 12, கோயிற்குடியிருப்பு 11, நாவற்காடு 8, நுணாவில் மத்தி 4.
18.04.2006 சாவகச்சேரிக் குண்டுவெடிப்பில் மாணவன்உட்படஇருவர்மரணம் சாவகச்சேரி தபால் நிலைய வீதியில் நேற்றுக் காலை 8.50 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கி மாணவன் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். சிப்பாய் ஒருவரும், பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர்.தூரத்தில் இருந்து வீசப்பட்ட கிரனேட் ஒன்றே வெடித்தது என்றும் வீதியோரமாக குப்பை ஒன்றுக்குள் இருந்த கிளைமோர் குண்டே வெடித்தது என்றும் முரண்பாடான தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இராணுவத்தினரை இலக்குவைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டே படையினர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டவேளை வெடித்தது என்று இராணுவத் தரப்பும் பொதுமக்கள் இருவர் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்பு இராணுவத்தினரால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று "பொங்கி எழும் மக்கள் படையும்' தெரிவித்துள்ளன.இந்தக் குண்டுவெடிப்பில் சிக்கி சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் அற்புதராசா சுரேஷ்குமார் (வயது 14) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மட்டுவில் சந்திரபுரத்தைச் சேர்ந்த சிவபாலன் திலீபன் (வயது 30) என்பவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கிருஷ்ணர் திருச்செல்வம் (வயது 35 மட்டுவில்), படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இவர் சாவகச்சேரி பல. நோ. கூட்டுறவுச் சங்கப் பணியாளர் எனக் கூறப்பட்டது.இச்சம்பவத்தில் சிப்பாய் ஒருவர் காயமடைந்தார் என்றும் கூறப்பட்டது.இச் சம்பவத்தையடுத்து சாவகச்சேரி நகரப்பகுதி வர்த்தக நிலையங்கள், சந்தை ஆகியவை மூடப்பட்டதால் வீதிகள் சன நடமாட்டமின்றி வெறிச்சோடின. இதேவேளை ஏ9 வீதியூடாக வாகனப் போக்குவரத்து இடம்பெற்றது. பொதுமக்கள் இருவர் உயிரிழந்த சம்பவம்:படையினர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்!பொங்கியெழும் மக்கள் படை குற்றச்சாட்டு சாவகச்சேரி தபால் நிலைய வீதியில் நேற்று பொதுமக்கள் இருவர் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்பு இராணுவத்தினரால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று "பொங்கியெழும் மக்கள் படை' தெரிவித்திருக்கிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக "பொங்கி எழும் மக்கள் படை யாழ். மாவட்டம்' என்ற பெயரில் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட ஓர் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:17.04.2006 அன்று சாவகச்சேரி கனகம் புளியடிக்கு இடைப்பட்ட தபால் நிலைய வீதிப் பகுதியில் இராணுவத்தின் அதி கண்காணிப்புப் பிரதேசத்தில் மிகவும் திட்டமிடப்பட்டு இராணுவத்தினரால் வெடிபொருள் பொருத்தி வைக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களே குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளனர்.உயிரிழப்புகளையும், குழப்பத்தையும், அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின் நோக்கம் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதே. இத்தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு மேலும் இருவர் படுகாயமுற்றுள்ளனர். இத்தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.இவ்வாறான கொடூர முகம் கொண்ட சிங் களப் பேரினவாதப் படைகளுக்கு எதிராக பழிக்குப்பழியாக எமது தாக்குதல் கள் தொடர்ந்தே தீரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீசாலையில் வர்த்தகர் சுட்டுக்கொலை மீசாலை புத்தூர்ச் சந்தியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார்.மீசாலை வடக்கு, இராமவிலைச் சேர்ந்த இராமலிங்கம் சகிலன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.குறிப்பிட்ட வர்த்தகர், புத்தூர்ச் சந்தியில் உள்ள தனது மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் இருந்தவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார் என்று கூறப்பட்டது.இரு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் இவரைச் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டனர் என்று பொலீஸார் கூறினர்.இறந்தவரின் கடைக்கு அருகில் உள்ள கடையின் உரிமையாளரை இராணுவத்தினர் விசாரித்தனர் என்றும்அதுகுறித்து கேள்விப்பட்ட அவர் பின்பக்கத்தால் பாய்ந்து ஓடிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.அவர் பளையில் இப்போது தங்கியுள்ளார் என்றும் கூறப்பட்டது.
மட்டுவிலில் சுற்றிவளைப்புமக்களைத் திரட்டி விசாரணை யாழ்ப்பாணம், மட்டுவில் பகுதியை நேற்றுமுன்தினம் மாலை 3 மணியளவில் சுற்றிவளைத்த படையினர் அந்தப்பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்கு உட்பட்ட ஆண்களை மட்டுவில் மகாவித்தியாலயத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.மட்டுவிலில் மூன்று மைல் சுற்றாடல் பிர தேசத்தை நேற்றுமுன்தினம் மாலை 3 மணி யளவில் படையினர் சுற்றிவளைத்தனர். வீடு கள், கடைகளில் தேடுதல்களை நடத்திய படையினர், 30 வயதுக்கு உட்பட்ட ஆண் களைக் கைதுசெய்து மட்டுவில் மகாவித்தியாலய மைதானத்துக்கு அழைத்துச் சென்ற னர்.இரவு 9 மணிவரை அவர்கள் விசாரணை செய்யப்பட்டனர். அவர்களுக்கு அறிவுரை வழங்கிய பின்னர் சகலரையும் படையினர் விடுவித்தனர்.
17.04.2006 மட்டுவிலில் கிளைமோர் தாக்குதல்! தென்மராட்சி, மட்டுவில் வடக்கில் நேற்றுக் காலை படையினரை இலக்குவைத்து கிளைமோர்த் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்குவைத்து கனகம்புளியடிச் சந்திக்கு மேற்குப் புறமாக இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் இரு சிப்பாய்கள் காயமடைந்தனர் என்று படைத்தரப்பை மேற்கோள்காட்டி பி.பி.ஸி. தமிழோசை தெரிவித்தது.இதேவேளை இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள பொங்கியெழும் மக்கள் படை இரு சிப்பாய்கள் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிட்டது.இத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பிற்பகல் 3 மணி முதல் அப்பகுதியில் இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தினர்.
14.04.2006 வெவ்வேறு சூட்டுச் சம்பவங்களில் தென்மராட்சியில் நால்வர் கொலை! தென்மராட்சியில் நேற்றுமுன்தினம் இர வும் நேற்று அதிகாலையும் பின்னர் நேற்று நண்பகளிலும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட் டுச் சம்பவங்களில் மூன்று இளைஞர்களும், ஓய்வுபெற்ற பொலீஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர்.இனந்தெரியாத நபர்கள் இந்தத் துப்பாக் கிச் சூட்டுப் படுகொலைகளை நிகழ்த்தி விட் டுத் தப்பியோடிவிட்டனர் எனக் கூறப்பட்டது.இனந்தெரியாத நபர்களினால் காரண, காரியம் புரியாத நிலையில் குடாநாட்டில் தினசரி பலர் சுட்டுக் கொல்லப்படுவது இங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.15 மணி யளவில் மிருசுவில் ஆயத்தடியைச் சேர்ந்த வரும் தையல் கடை உரிமையாளருமான 25 வயதுடைய செல்வரத்தினம் சிவகுமார் என் பவர் அவரது வீட்டு வாசலில் வைத்து சுட் டுக்கொல்லப்பட்டார்.வீட்டின் வேலியோரமாகத் துப்பாக்கி தாரிகள் நடமாடியவேளை நாய்கள் ஓயாது குரைத்தன என்றும் இதனையடுத்து குறிப்பிட்ட இளைஞர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார் என்றும் கூறப்பட்டது.இதேவேளை, நேற்று அதிகாலை ஒரு மணிநேர இடைவெளியில் தென்மராட்சி யில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின் றனர். கண்டி வீதி, சாவகச்சேரியைச் சேர்ந்தவரும் யாழ். நகரிலும் சாவகச்சேரியில் உள்ள நகைக் கடைகளின் உரிமையாளருமான 36 வயதுடைய பஞ்சாட்சரம் கிருபாகரன் என்ற இளைஞனும் சரசாலை சீனிச்சங்கப் பகுதியைச் சேர்ந்த "லாண்ட் மாஸ்ரர்' சாரதியான 31 வயதுடைய தம்பிராசா தயாபரன் என்ற இளைஞனும் சுட்டுக்கொலைசெய்யப்பட்டி ருக்கின்றனர்.நகைக்கடை உரிமையாளரான கிருபா கரன் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அவரது வீட்டு வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.வீட்டினுள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத் துச் சுட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.சரசாலை சீனிச்சங்கப் பகுதியைச் சேர்ந்த தயாபாரன் என்ற இளைஞன் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட் டுள்ளார்.வீட்டு வெளிவாசலுக்கு முன்பாக நின்ற வேளை இவர் சுடப்பட்டார் என்று கூறப்பட் டது. இதேசமயம் மீசாலைப் பகுதியில் நேற்று நண்பகல் 10.30 மணியளவில் ஓய்வு பெற்ற பொலீஸ் அதிகாரியான தம்பையா இரத்தினசபாபதி (வயது 64) என்பவர் இனந்தெரியா தோரால் சுட்டுக்கொல்லப் பட்டார்.நால்வருடைய சடலங்களையும் சாவகச் சேரி நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய சாவ கச்சேரிப் பொலீஸார் யாழ். மருத்துவமனைக்கு எடுத்துவந்து ஒப்படைத்துள்ளனர்.
12.04.2006 சிறுவர் அரங்கக் கருத்தரங்கு இன்று "செயல்திறன் அரங்க இயக்கம்' வளரும் பயிருக்கு முளையில் உதவும் சிறுவர் அரங்கக் கருத்தரங்கு 3ஆவது அமர்வினை தென்மராட்சி கல்வி வலயத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளது.இக் கருத்தரங்கின் முதலாவது அமர்வு 2003ஆம் ஆண்டு நாவலர் மண்டபத்திலும் இரண்டாவது அமர்வு இந்த ஆண்டு மார்ச் மாதம் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் நடைபெற்றன.இதன் மூன்றாவது கருத்தரங்க அமர்வு இன்று புதன்கிழமை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் மு.ப. 9 மணிதொடக்கம் பி.ப. 4.30 மணிவரை நடைபெறவுள்ளது.இக் கருத்தரங்கில் திருமதி மகாலிங்கத்தின் (கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி கல்வி வலயம்) சிறப்புரையும், "சிறுவர் அரங்கு ஊடாக நாடக எழுத்துருப் படைப்பாக்கம்', "சிறுவர் நாடகத் தயாரிப்பு', "சிறுவர் நாடகப் பாடல்கள்' தொடர்பான கருத்துரைகளும் இடம்பெறவுள்ளன.இக் கருத்துரைகளினை குழந்தை ம.சண் முகலிங்கம், தே.தேவானந் (இயக்குநர், செயல்திறன் அரங்க இயக்கம்), நா.சிவசிதம்பரம் (ஆசிரியர், கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம்) ஆகியோர் வழங்கவுள்ளனர்.கருத்துரையோடு குழந்தை ம.சண்முக லிங்கம் எழுதி நெறியாள்கைசெய்த "பந்தயக் குதிரையார்', "கண்மணிக் குட்டியர்' ஆகிய இரண்டு நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன.
05.04.2006 ஜோசப் பிளாட்டருக்கு பாப்பாவின் விசேட செய்தி வீரமும் விவேகமுமான தலைமுறையே தேசியத் தலைவர் பிரபாவின் எதிர்பார்ப்புஉலக உதைபந்தாட்ட சங்கத் தலைவருக்கு பாப்பா விசேட செய்தி வீரமும் விவேகமுமான தலைமுறை உருவாகவேண்டும் என்பதே தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் எதிர்பார்ப்பாகும்.உலக உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் பிளாட்டருக்கு தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா அனுப்பிய விசேட செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:எங்கள் இளைய தலைமுறை சிறப்பான ஒரு வாழ்வைப் பெறவேண்டும். ஒவ்வொரு இளைஞனும் வீரமும் விவேகமுமான தலைமுறையாக உருவாகவேண்டும். இதுவே எங்கள் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் எதிர்பார்ப்பாகும். அவர் உதைபந்தாட்டத்தின்மீது பெரும் ஈடுபாடுடையவர். எங்கள் போராட்டத்தின் அடித்தளமே எதிர்காலத் தலைமுறையின் மகிழ்ச்சியான வாழ்வும் எமது மக்களின் கௌரவத்துடன் கூடிய அமைதியான இருப்பும் நோக்கிய பயணமாகிறது.கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலான யுத்தத்தினால் எமது மக்கள் நிறைய துயரத்தை அனுபவித்துள்ளார்கள். அக்காலங்களில் உதைபந்தாட்டமும் அவர்களின் மன அழுத்தத்தை மாற்றும் மருந்தாக அமைந்திருந்தது. மக்கள் மீதான தொடர்ச்சியான குண்டு வீச்சும் ஷெல்தாக்குதல்களும் உதைபந்தாட்டத்தில் ஈடுபடுவதன்மூலம் கிடைத்த மகிழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. உரிய காலணி இன்றி வெறும் கால்களுடன் வசதிகள் எதுவும் இன்றியும் உதைபந்தாட்டம் எமது மண்ணில் தொடர்ந்தது. 2002 பெப்ரவரி கைச்சாத்தான யுத்த நிறுத்த ஒப்பந்தம் வரை 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான பொருளாதாரத்தடை எம்மக்கள்மீது சுமத்தப்பட்டிருந்தது. விளையாட்டு உபகரணங்களும் இதற்கு விதி விலக்காகவில்லை.இப்போது வடக்குகிழக்குப் பகுதியில் 8 உதைபந்தாட்டப் பயிற்சி நிலையங்களுக்கு சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிதியுதவி கிடைக்கிறது. இதற்காக உங்களுக்கு எங்கள் மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தற்போது வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட அபிவிருத்திச் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கு தமிழர் தாயகத்தில் உதைபந்தாட்டத்தை வளர்த்தெடுக்க உதவும்படி வேண்டுகிறேன்.இவ்வாறு விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதி களில் உதைபந்தாட்டப் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கான செயற்திட்டத்தைக் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் களுத்துறையில் இடம்பெற்றது. இதில் தமிழீழ விளையாட்டுத்துறையின் பிரதிநிதி கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம், தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரின் விசேட செய்தியை வாசித்து ஜோசப் பிளாட்டரிடம் வழங்கினார். அத்துடன், விடுதலைப் புலிகள் சார்பில் நினைவுப் பரிசையும் அவர் ஜோசப் பிளாட்டருக்கு வழங்கினார். தினக்குரல் ஒளிவு மறைவின்றி பகுதியிலிருந்து இங்கு வந்திருந்த சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் ஜோசப் பிளட்டர் களுத்துறையில் நடந்த நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்தைப் பலரும் சிலாகித்துப் பேசினர். வடக்கு, கிழக்கு, தெற்கில் கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்துக்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை வழங்க இவர் வந்திருந்தார். அந்த நிகழ்வில் அவர் பேசும்போது, இலங்கையில் கடல்கோளால் பாரிய அழிவு ஏற்பட்டது துரதிர்ஷ்டமே. ஆனால், அந்தக் கடல்கோள்தான் வடக்கையும் தெற்கையும், இரு தசாப்த கால யுத்தத்தின் பின் சமாதான வழிக்கும் கொண்டு வந்துள்ளது. வடக்கு, கிழக்கிலிருந்து அநேகர் இங்கு வந்திருப்பது இதை உணர்த்துகிறது. அதுமட்டுமா, விடுதலைப் புலிகளே என்னை வாழ்த்திச் செய்தியொன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விடயம் என்றார். 1958 இல் டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தலில் இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை வென்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம், விடுதலைப் புலிகளின் வாழ்த்துச் செய்தியை அங்குவாசித்தார். விளையாட்டுத்துறையில் தோழமை பிரதிபலிக்கின்றது. அரசியல்வாதிகள்தான் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
பாடநூல்கள் இன்றி மாணவர் சிரமம் தென்மராட்சிக் கல்வி வலயப் பாடசாலைகளின் தரம் 8 வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், கணிதம் ஆகிய பாடநூல்கள் பாடசாலைகள் ஆரம்பித்து நான்கு மாதங்களாகியும் கிடைக்காததால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைந்துள்ளதாகப் பெற்றோர் தெரிவித்தனர்.கடந்த வருடம் தரம் 7 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், கணிதம் ஆகிய பாடநூல்கள் வராத காரணத்தால் கஷ்டத்தின் மத்தியில் கல்வி கற்றனர்.அந்த மாணவர்களுக்கு இந்த வருடமும் உரிய புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்தவாரம் ஒரு தொகுதி பாடநூல்கள் கல்வி வலயத்திற்கு வந்தபோதிலும் தரம் 8 வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், கணிதம் ஆகிய பாடநூல்கள் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 03.04.2006
சாவகச்சேரியில் கொமர்ஷல் வங்கியின் புதிய கிளை
யாழ். நகரிலும் சாவகச்சேரியிலும்கொமர்ஷல் வங்கியின் புதிய கிளைகள் யாழ். நகரிலும், சாவகச்சேரியிலும் கொமர்ஷல் வங்கியின் இரண்டு கிளைகள் இந்தவாரம் ஆரம்பிக்கப்படுகின்றன.சாவகச்சேரி நகரில், கண்டி வீதியில், இலக்கம் 7இல் அமைந்துள்ள கட்டடத்தில் நிறுவப்பட்டிருக்கும் புதிய கிளை இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.20 மணியளவில் சுபநேரத்திற்கு திறந்துவைக்கப்படுகிறது.யாழ். நகரில் ஸ்ரான்லி வீதியில் முன்னர் தபாலகம் அமைந்திருந்த கட்டடத்தில் நிறுவப்பட்டிருக்கும் வாடிக்கையாளர் சேவை நிலையம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.இந்த இரண்டு அலுவலகங்களினதும் ஆரம்ப வைபவத்தில் கொமர்ஷல் வங்கியின் தலைமையக அதிகாரிகளும் யாழ்ப்பாண அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.சாவகச்சேரியில் திறக்கப்பட இருக்கும் கிளையில் நாடு முழுவதும் உள்ள கொமர்ஷல் வங்கிக் கிளைகள், வாடிக்கையாளர் சேவை நிலையங்கள், "மினிகொம்' நிலையங்களின் வலை அமைப்பின் உதவியுடன் கணக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தொலைபேசி வங்கிச்சேவை, செல்லிடத்தொலைபேசி வங்கிச்சேவை, இன்ரநெற் வங்கிச்சேவை வசதிகளும் கொம் சக்தி லீசிங் வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.ஸ்ரான்லி வீதியில் திறக்கப்படவுள்ள வாடிக்கையாளர் சேவை நிலையத்திலும் இந்த எல்லா வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
மீளக்குடியமர முடியாதவர்களுக்குதங்கியுள்ள இடத்தில் நிவாரணம்தென்மராட்சிப் பிரதேச செயலர் ஏற்பாடு இடம்பெயர்ந்த பின்னர் சொந்த இருப்பி டங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் ஏனைய பிரதேசங்களில் தங்கியுள்ள தென்ம ராட்சிப் பிரதேச மக்களில் இடம்பெயர்ந் தோர் நிவாரணம் மற்றும் சமுர்த்தி நிவாரணம் பெறுவோர் தமது நிவாரணங்களை தாம் தங்கியுள்ள பகுதிகளில் பெற்றுக்கொள்ள ஏற் பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென்மராட்சியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தாம் தங்கியுள்ள பிரிவுக் கிராம அலுவலருடன் தொடர்புகொண்டு பதி வினை மேற்கொண்டு அப்பகுதியிலேயே நிவாரணத்தைப் பெற்றுக்கெள்ளுமாறு பிர தேச செயலர் செ.ஸ்ரீநிவாசன் அறிவித்துள் ளார். ஏனைய பிரதேசங்களில் தங்கியுள்ள குடும் பங்களுக்கு தென்மராட்சி பிரதேச செயலகத் தினால் வழங்கப்படும் நிவாரண முத்திரை கள் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தப்படுமென வும் அவர் அறிவித்துள்ளார். 20.03.2006
மட்டுவில் பன்றித்தலைச்சி ஆலயத்தில்பங்குனித் திங்கள் உற்சவத்தின் போதுசுகாதாரம் பேணுமாறு அறிவுறுத்து
வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனித் திங்கள் உற்சவத்தையொட்டி அங்கு உணவுப் பொருள்களை விற்பனை செய்வோரையும், ஆலயத்துக்கு வரும் அடியார்களையும் சுகாதாரம் பேணுமாறு சாவகச்சேரி பிரதேச சபையினரும் சுகாதாரப் பகுதியினரும் கோரியிருக்கின்றனர்.உணவுக் கடைகள், இனிப்பு வகைகள், ஐஸ்கிறீம் விற்பனை நிலையங்கள், ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபடும் வான்கள், கச்சான் விற்பனையாளர்கள் சுகாதார நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும் என்று சாவ கச்சேரி சுகாதாரப் பிரிசோதகர் ஆர்.சிரேஸ்ட குமார் கேட்டுள்ளார்.இனிப்புப் பண்டங்களை விற்பனை செய்ப வர்கள், கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து தொற்றுக்கள் ஏற்படாதவாறு பாதுகாத்து அவற்றை விற்கவேண்டும்.உணவுச் சாலைகள் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டு தற்பொழுது நடைமுறையில் உள்ள சுகாதார நடவடிக்கைக்கேற்ப நடத்துதல் வேண்டும். ஐஸ்கிறீம் விற்பனையாளர்கள், ஐஸ்கிறீம் வானில் விற்பனை செய்பவர்கள் 2006 இற்கான உரிமம் பெற்றிருப்பதுடன் சுகாதார நடைமுறைக்கேற்ப தொற்றுக்கள் ஏற்படாதவாறு விற்பனை செய்தல் வேண்டும்.கச்சான், கடலை வியாபாரிகள் சுகாதார முறைக்கேற்ப பொலித்தீனினால் மூடி விற்பனை செய்தல் வேண்டும்.மேற்குறிப்பிட்ட சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆலய சூழல் பகுதி சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.இதேவேளை ஆலய சூழலில் கூடும் அடியார்களும் தமது சுகாதார நடவடிக்கை களை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடியார்கள் ஆலய சூழலில் பொலித்தீன் பொருள்களின் பாவனையைக் குறைத்துக் கொள்வதுடன் பாவிக்கப்பட்ட ஐஸ்கிறீம் "கப்பு'கள், பொலித்தீன் பைக்கற்றுக்களை ஆலய சூழலில் வைக்கப்பட்டுள்ள கழிவுத் தொட்டிகளில் போடுமாறும் கேட்கப்பட்டுள்ளது. மலசல கூடங்களைப் பாவிப்பவர்கள், அவற்றை சுத்தமாகப் பாவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|