2.8.12

செய்திகளில் ஊரும் அயலும்-August 2012


 ஏ9 வீதியில் விபத்து
இளைஞன் சம்பவ இடத்தில் பலி

சாவகச்சேரி ஏ9 வீதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மணல் ஏற்றிக் கொண்டு யாழ். நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் யாழில் இருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஸ்தலத்திலேயே துடிதுடித்து மரணமடைந்துள்ளார். கொட்டடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய தில்லையம்பதி தயாபரன் இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவரே சம்பவ இடத்தில் மரணமானவராவார். இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
இன்று காலை 6மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது. தற்போது ஏ9 வீதி திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதனால் வீதியின் பல இடங்களில்வீதி  மறிக்கப்பட்டு இருவழிப் போக்குவரத்துக்களை விடுத்து ஒரு வழிப்போக்குவரத்தாக விடுவிக்கப்பட்டு வருவது வழமை ஆனாலும் பெரிய ரக வாகனங்கள் மட்டுமே ஒரு வழிப்பாதையில் மறிக்கப்பட்டும் மோட்டார் சைக்கிள் உட்ளிட்டவை மறிக்கப்படுவதில்லை. அதே தருணத்தில் தான் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன் போது யாழ். நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகத்தில் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்தின் கீழ் அகப்பட்டுக் கொண்டது. குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இவரது சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் கணபதிப்பிள்ளை சடலத்தை உடற் கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (Uthayan 31.8.12)

கைதடி அரச சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த பச்சிளம் குழந்தை இறப்பு
[ செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,  Tamilwin]
குடாநாட்டின் அரச சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் இருந்த பச்சிளம் குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது. கிளிநொச்சியில் பிறந்த ஜெயலக்சுமி என்று பெயரிடப்பட்ட மூன்றரை வயதுக் குழந்தையே உயிரிழந்தது என்று யாழ். போதனா வைத்தியசாலை தெரிவித்தது.

கைதடியில் உள்ள அரச சிறுவர் இல்லத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்குப் போதிய ஆளணி வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்த நிலையில் இந்தக் குழந்தை இறந்துள்ளது.

குழந்தை நோய்வாய்ப்பட்டே இறந்து போனதாக யாழ். போதனா வைத்தியசாலை தெரிவித்தது.

குழந்தை ஒரு மாதத்துக்கு முன்னரே சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து குழந்தை ஒப்படைக்கப்பட்ட போதே, அதன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உயிரிழக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்று வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் ரி.விஸ்பரூபன் தெரிவித்தார்.

குழந்தையை கொழும்புக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதும் குணப்படுத்த முடிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார். சில மாதங்களுக்கு முன்னர் இதே அரச சிறுவர் இல்லத்தில் இருந்த குழந்தை ஒன்று உயிரிழந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் மறுசீரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டது.

அப்படி இருந்த போதும் இல்லத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்ப பராமரிப்பாளர்கள் இல்லை என்று கூறப்படுகின்றது. தற்போது இல்லத்தில் 31 குழந்தைகள் உள்ளன. இவற்றைப் பராமரிக்க 7 பராமரிப்பாளர்கள் உள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள்.

இரவு பகல் என மாறி மாறி வரும் கடமை என்பதால் ஒரு நேரத்தில் ஆகக் கூடுதலாக 3 பேர் மட்டுமே கடமையில் இருக்கின்றனர். 10 பிள்ளைகளுக்கு ஒரு தாய் என்ற ரீதியில் பராமரிப்பைச் செய்வது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

திணைக்கள விதிகளுக்கு அமைய 5 பிள்ளைகளுக்கு ஒரு பராமரிப்புத் தாய் இருக்க வேண்டும். இப்போதும் அவ்வாறே உள்ளது. இருப்பினும் ஆளணியை அதிகரிப்பதற்குக் கோரியுள்ளோம் என்று ஆணையாளர் ரி.விஸ்பரூபன் தெரிவித்தார்


சாவகச்சேரி சந்தையில் அளவீட்டு விவரப்பட்டியல்
சாவகச்சேரி பொதுச்சந்தையில் வரி அறவீடு தொடர்பான விவரப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது குறித்து பொது மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட சந்தைகளில் அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பாக உள்ளூராட்சி சபைகளுக்கு பொதுமக்கள் நாளாந்தம் முறையிட்டு வரும் இந்த வேளையில் சாவகச்சேரி நகர சபையில் கட்டண அறவீடு தொடர்பான விவரங்களை அறிவித்தல் பலகைகளில் எழுதி பொதுச் சந்தையின் அனைத்து கடவைகளுக்கு அருகில் நாட்டு வைத்துள்ளனர். இதனால் சந்தைக்கு பொருள்கள் கொண்டு வருவோர் தாம் செலுத்த வேண்டிய கட்டணத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது என்று கூறப்பட்டது.


கைதடி மத்திய மருந்தகத்தை அகற்றி வடமாகாண சபைத் தலைமையகம் அமைக்கத் திட்டம்?
By Virakesari 2012-08-23 10:34:55
 கைதடியில் அமைந்துள்ள கைதடி மத்திய மருந்தகம் (ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம்) அமைந்துள்ள இடத்தில் வடமாகாண சபையின் தலைமையகம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் அந்த பராமரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக வடமாகாண சபையின் பிரதான செயலாளர் திருமதி ஆர். விஜயலட்சுமியிடம் எமது செய்திப்பிரிவு வினவியது. அதற்குப் பதிலளித்த அவர், 'இதைப் பற்றிக் கதைக்க வேண்டும் என்றால் நேரடியாக வந்து கதையுங்கள். ஏதாவது தகவல் தேவை என்றால் நேர வந்து சந்தியுங்கள். உங்களுக்கு யாராவது இங்கே இருப்பினம் தானே. நேர வந்து கதைக்கச் சொல்லுங்கள்" எனத் தெரிவித்தார்.

 ஏ 9 வீதியில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு மையப்பகுதியில் இக்கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் அமைந்துள்ளது. சமூகத்தில் விசேட தேவையுடையவர்கள் நிறைந்து வாழும் இப்பிரதேசத்தில் இவ்வைத்தியசாலை (ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம்) அமைந்துள்ளமையால் அதன் அமைவிடமும், இருப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

 இந்த பராமரிப்பு நிலையத்தின் சேவை கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள வயோதிபர்கள், நவீல்ட் விழிப்புலனற்றோர் பாடசாலையில் உள்ள விசேட தேவையுடையவர்கள், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் காப்பகமான இரட்சண்யசேனை இல்லக் குழந்தைகள் என பரந்துள்ளது.

 மேலும் விழிப்புலனற்றோருக்கான தொழிற்பூங்கா, யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட விடுதி என பலர் இப்பிரதேச மருத்துவமனையை நம்பி வாழ்கின்றனர். அத்துடன் வட மாகாண ஆயுள்வேத சிகிச்சை நிலையத்தில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக ஆங்கில மருத்துவமனைகளை நாடும் நோயாளிகள், அங்கு அமைந்துள்ள ஒன்பது அமைச்சுக்களுக்குரிய அலுவலர்கள் மற்றும் இப்பிரதேச மக்கள் என வைத்தியசாலையின் தேவை அதிகரித்த நிலையில் உள்ளது. ஆகவே கைதடி வயோதிபர் இல்லத்துக்கு அருகில் உள்ள கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் தேவை மிகவும் இன்றியமையாதது.

 கைதடி வயோதிபர் இல்லத்துக்கு நிரந்தரமான வைத்தியர் மற்றும் பயிற்றப்பட்ட தாதி இல்லாமையால் அங்குள்ளவர்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்குவதுடன் இவ்வைத்தியசாலையில் நாளாந்தம் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வைத்தியசாலை குறிப்பிட்ட இடத்தில் 1952 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருவதுடன், தற்போது அங்கு டாக்டர் அருள்நேசன் கடமையாற்றி வருகிறார்.

 ஆகவே வடமாகாண சபை மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியவை இணைந்து வடமாகாண சபையின் தலைமையகத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் இவ்வைத்தியசாலை அமைந்துள்ள இடத்துக்கு மாற்றீடான இடத்தை வழங்கி அவ்வைத்தியசாலையைத் தரமுயர்த்துவதுடன், தொடர்ந்து இயங்கச் செய்ய வேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சாவகச்சேரி பிரதேச சபைக்கு  கொடிகாமம் ஏ-வீதியில் 33 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தலைமை அலுவலகக் கட்டடத் திறப்புவிழா அண்மையில் இடம்பெற்றது.


பயிரழிவுக்கு 15 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் விவசாயிகள்; கட்டாக்காலிகளை கட்டுப்படுத்தத் தவறியதால் சாவகச்சேரி நகரசபைக்கு நோட்டீஸ்

 சாவகச்சேரி பிரதேச சபையிடமிருந்து 15 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகை கோரி சட்டத்தரணி மூலம் முன்னறி வித்தல் வழங்கியுள்ளனர் தனங்கிளப்பு கமக்கார அமைப்பினர். கடந்த வருடம் காலபோக நெற்செய்கையின் போது சேதங்களை ஏற்படுத்திய, விளைச்சலைப் பாதித்த கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தத் தவறியதாக குற்றஞ்சாட்டியேயே இவ்வாறு விவசாயிகள் இழப்பீட்டுத் தொகையைக் கோரியுள்ளனர். கடந்த வருடம் நெற்செய்கைக்கு அனுமதிக்கப்பட்ட 660 ஏக்கர் வயல் நிலத்தில் 369 விவசாயிகள் செய்கையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் வயல்களில் அத்துமீறி நுழைந்த கால்நடைகளால் நெற்பயிர்கள் அறுவடை செய்யமுடியாத அளவுக்கு நாசமாகின. இதனால் அனைத்து நெற்செய்கையாளர்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. "அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான பிரதேச சபையினரே பயிர்களைப் பாதுகாக்க வேண்டும்'' எனப் பயிர்கள் பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டும் விவசாயிகள்இதனால் நகரசபை தமக்கு இழப்பீடு தரவேண்டும் என்று தெரிவிக்கின்றனர். நெல் விதைக்கப்பட்டதிலிருந்து பல தடவைகள் தமது நெற் பயிர்களைப் பாதுகாக்க கட்டாக்காலிகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் பிரதேச சபையிடம் முறையிட்டிருந்தனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த பிரதேசசபை தவறிவிட்டது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, குறித்த பாதிப்புக்கான இழப்பீடாக 15 மில்லியன் ரூபாவை தென்மராட்சிப் பிரதேச சபைத் தலைவர் தமக்கு 14 தினங்களுக்குள் வழங்க என்று கேட்டு விவசாயிகள் சட்டத்தரணி மூலம் "நோட்டீஸ்" அன்னுப்பியுள்ளனர். இல்லாவிட்டால் நீதிமன்றின் மூலம் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று தனங்கிளப்பு கமக்கார அமைப்பு அனுப்பிய அந்த "நோட்டீஸில்" கூறப்பட்டுள்ளது. இதேவேளை இந்தப் பகுதியில் நெற் செய்கையில் ஈடுபட்டு பயிர் அழிவைச் சந்தித்த ப.வே.இராசரத்தினம் என்ற விவசாயியும் ஒரு லட்சம் ரூபா இழப்பீடு கோரி சட்டத்தரணி மூலம் பிரதேச சபைத் தலைவருக்கு "நோட்டீஸ்" வழங்கியுள்ளார்.(Uthayan)
இளம் குடும்பப் பெண் தீயில் ௭ரிந்து மரணம் ; சாவகச்சேரியில் சம்பவம் _
Virakesari 8/3/2012 9:54:58 AM
Share
  யாழ். தென்மராட்சியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தீயில் ௭ரிந்து மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் சாவகச்சேரி சிவன் கோயிலடியைச் சேர்ந்த அயந்தன் சுதர்சினி (வயது 19) ௭ன்ற குடும்பப் பெண்ணே மரணமடைந்தவராவார். நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பெண் மன்னாரைச் சேர்ந்தவர் ௭னவும் கடந்த மாதம் திருமணம் செய்து சாவகச்சேரியில் வசித்து வந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பே இச்சம்பவத்திற்குக் காரணம் ௭னவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மனக்கசப்பு காரணமாக வீட்டின் சமையலறைக்குள் சென்ற இவர் கதவைப் பூட்டிவிட்டு மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீயிட்டுள் ளதாகத் தெரியவருகிறது. மனைவி தீப்பற்றி ௭ரிவதை அறி ந்த கணவர் அவரைக் காப்பாற்ற முற்பட்ட போதும் கதவு பூட்டியிருந்ததால் கதவை உடை த்து அவரை சாவகச்சேரி வைத் தியசா லை யில் சேர்த்துள்ளார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
_

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை வழங்க மருத்துவர் ஜெயக்குமாரன் முன்வந்துள்ளார்.     
புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் பணிகள் வழமைக்குத் திரும்பின
 யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சுகாதார அமைச்சுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதை அடுத்து பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா வைத்தியசாலைகளுக்குச் சென்று புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதை மீண்டும் ஆரம்பித்துள்ளதாகப் புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக் குமாரன் தெரிவித்தார்.
சாவகச்சேரி, சங்கானை, காரைநகர் வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சையளிப்பதைக் கைவிட்டுள்ள ஜெயக்குமாரன் இந்த வைத்தியசாலைகளைச் சேர்ந்த புற்றுநோயாளர்கள் அனைவரையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்லுமாறும் கேட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக வைத்தியர் சங்கம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திவந்த நிலையில் புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக் குமாரனின் கந்தர்மடத்திலுள்ள வீடு மீது கடந்த மாதம் கழிவுஒயில் ஊற்றப்பட்டு ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டார்.
அதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளுக்குச் சென்று புற்றுநோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதை இடைநிறுத்திக் கொண்டார்.
அவரது வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்தும் வைத்தியசாலை முறைகேடுகள் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளரை இடமாற்றம் செய்து விசாரணை நடத்தும்படியும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா வைத்தியசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு சுகாதார அமைச்சுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டார். இதனையடுத்து ஏனைய வைத்தியசாலைகளுக்கும் சென்று சிகிச்சை வழங்க மருத்துவர் ஜெயக்குமாரன் முன்வந்துள்ளார்.