2.3.12

செய்திகளில் ஊரும் அயலும்-March2012

பாடசாலை வகுப்பறைக்குள் வெடிக்காத நிலையில் ஷெல்! யாழ். கிளாலியில் பரபரப்பு
[ வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012, 06:12.44 AM GMT ] [ உதயன் ]
யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் வகுப்பறைக்குள் வெடிக்காத நிலையில் ஷெல் இருந்ததால் மாணவர்களும், பாடசாலை ஆசிரியர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

குறித்த பாடசாலையின் வகுப்பறைக்குள் கதிரை ஒன்றை வைத்து அமரும்போது, ஓரிடத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. அந்த இடத்தில் கல் இருக்கலாம் என்று நினைத்து மாணவர்கள் நிலத்தைக் கையால் தோண்டியுள்ளனர்.

ஆனால் அங்கு ஷெல் போன்ற ஒரு மர்மப்பொருள் காணப்பட்டதால் பயந்துபோன மாணவர்கள் அது குறித்து வகுப்பாசிரியர் ஊடாக அதிபருக்கு அறிவித்தனர்.

அதிபர் அருகில் உள்ள படையினரின் முகாமுக்கு இது குறித்துத் தெரிவித்தார். படையினர் அவ்விடத்தைத் தோண்டியபோது வெடிக்காத நிலையில் ஷெல் இருப்பதைக் கண்டு அதனை மீட்டுச் சென்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையின் வகுப்பறை நிரந்தரமாக அமைக்கப்பட்ட போதிலும் நிலத்திற்கான வேலைகள் இடம்பெறாததால் மணலில் இருந்தே மாணவர்கள் கல்வி கற்று வருகின்றர்.

இதேவேளை ஒரு மாதத்துக்கு முன்னரும் இந்தப் பாடசாலை வளாகத்தில் காணப்படும் மரம் ஒன்றின் கீழ் புதையுண்ட நிலையில் வெடிக்காத ஷெல் ஒன்று மாணவர்களால் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக பாடசாலையின் அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது "பாடசாலை வளாகப் பகுதி வெடி பொருள்கள் அகற்றும் நிறுவனத்தினரால் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னரே பாடசாலை இயங்க அனுமதிக்கப்பட்டது.

பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட பள்ளங்கள், வாகனங்களில் தருவிக்கப்பட்ட மணல் கொண்டு மூடப்பட்டன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட மணலுக்குள்ளேயே இந்த வெடிபொருள்கள் வந்திருக்க வேண்டும் என்றார்.


மீசாலை பெண் படுகொலை வழக்கில் சந்தேக நபரான கணவர் நிபந்தனை பிணையில் விடுதலை!
[ வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012, 06:45.26 AM GMT ] [ தமிழ்வின் யாழ் நிருபர் ]
மீசாலையில் மனைவியைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேக நபரான கணவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் நேற்றுப் பிணை வழங்கியுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் 6ம் திகதி மீசாலையில் குகதாஸ் சாந்தினி என்ற பெண் அவரது வீட்டிலிருந்து கடத்திச்செல்லப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிறிதொரு இடத்திலிருந்து அவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது

இதன்போது கனடாவிலிருந்து திரும்பிய கணவர் உட்பட ஐந்து பேர் பொலிஸரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆயினும் முதலாம் சந்தேக நபர் தவிர ஏனையவர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்ற போது நீதிபதி சந்தேக நபரை ஒரு லட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதித்ததோடு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.





மண் அகழ்வைத் தடுத்தபோது தாக்க முனைந்த வி­ஷமிகள்; சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடு
Uthayan 23.3.12
சட்ட விரோதமாக மணல் ஏற்றுவதைத் தடுக்கச் சென்ற ஊர்ப் பிரமுகரின் தொலைபேசியைப் பறித்து உடைத்ததுடன் அவரை மணல் ஏற்றும் ஆயுதத்தால் தாக்க முற்பட்டனர் என்று சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் எழுது மட்டுவாழ் தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட ஒட்டுவெளி வயல் பகுதியில் இடம்பெற்றது.விராலி தோட்டம் என்னும் இடத்துக்கு வாகனத்தில் வந்த மூவர் சட்ட விரோதமாக மணல் ஏற்ற முற்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியால் வந்த குறித்த நபர் இப்பகுதியில் மணல் ஏற்ற வேண்டாம் என்று தெரிவித்ததுடன் இந்த விடயம் தொடர்பாகத் தொலைபேசி மூலம் அப்பகுதி மக்களுக்கும் அறிவிக்க முற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட நபர் வைத்திருந்த கைத்தொலைபேசியைப் பறித்து எறிந்ததுடன் கையில் வைத்திருந்த சவளினால் தாக்க முற்பட்டனர் என்றும் பொலிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறிப்பிட்ட நபர் அங்கிருந்து சென்று ஊர்மக்களுக்குத் தெரிவித்தார் என்றும் ஊர் மக்கள் அங்கு செல்வதற்கு முன்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

?




யாழ். நகருக்கு அடுத்தபடியாக சாவகச்சேரியும் விரைவில் உயரும்; சரவணபவன் எம்.பி புகழாரம்
news

சாவகச்சேரி நகர சபையும், சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் சங்கமும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதால் இந்த நகரம் துரித கதியில் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய நகர சபைகளும், பிரதேச சபைகளும் செயற்பட்டு நமது பிரதேசத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

நேற்று சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்தப் பாராட்டுதலையும் வேண்டுகோளையும் வெளிப்படுத்தினார்.சாவகச்சேரி நகரசபைத் தலைவர் தேவசகாயம்பிள்ளை தலைமையில் சாவகச்சேரி நகரை அபிவிருத்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள நவீன கடைத்தொகுதி மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம் பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரணபவன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு:
ஏனைய இடங்களில் காணப்படாத ஒற்றுமையும் பரஸ்பர புரிந்துணர்வும் சாவகச்சேரி நகரசபையில் காணப்படுகின்றன.நகர சபையும், வர்த்தகர்சங்கமும் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றன. போட்டியின்றி பரஸ்பர புரிந்துணர்வுடன் திட்டமிட்டு செயற்படுகின்றனர். எனவே வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்துக்கு அடுத்த சிறந்த நகரமாகக் கூடிய நிலையைச் சாவகச்சேரி விரைவில் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கு செயற்படுத்தப்படும் அபிவிருத்திப் பணிகள் சிறப்பானவை. அவை இன்னும் தூரநோக்குடன் செயற்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்னாலான சகல உதவிகளையும் வழங்குவேன் என்று கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் கேணல் ரொஷான், நகர அபிவிருத்திச் சபைப் பணிப்பாளர் இராசநாயகம், பிரதேச செயலாளர் திருமதி சாந்தசீலன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத் தலைவர் வி.சிறீபிரகாஷ் தலைமையிலான வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாவகச்சேரி நகரில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது ஆராயப்பட்டன.
சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் என்பன நகர அபிவிருத்தி அதிகார பிராந்தியப் பணிப்பாளருடன் இணைந்து கூட்டாகத் தயாரிக்கப்பட்ட நவீன கடைத் தொகுதி கட்டடத்தின் மாதிரி வரைபடமும் அங்கு பரிசீலிக்கப்பட்டது.சகல வசதிகளுடன் இரண்டு மாடிக் கட்டடமாக அமைக்கப்படவுள்ள இக்கடைத் தொகுதியில் வர்த்தகர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் தேவையான சகல வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன.
கலந்துரையாடலின் பின் நாடாளுமன்ற உறுப்பினர், நகரசபைத் தலைவர், யாழ். நகர் சங்கப் பிரதிநிதிகள், நகரசபை அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், நகரசபை அதிகாரிகள் ஆகியோர் நவீன கடைத் தொகுதி அமைக்கப்படவுள்ள இடத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

கத்தியைக் காட்டி மிரட்டி இளம் பெண் மீது வன்புணர்வு;தென்மராட்சியில் மாலை நேரம் காமுகர்கள் இருவர் கொடூரம்
13.3.2012

வீதியில் தனியே சென்ற இளம்பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி இருவர் வன்புணர்வு செய்த கொடூரம் தென்மராட்சியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

காமக் கொடூரர்கள் இருவரிடம் இருந்தும் ஒருவாறு தப்பி வீடு வந்து சேர்ந்த அவர் இந்தச் சம்பவம் குறித்துப் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பொலிஸாரிடம் முறையிட்டனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி பெண் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் 24 வயதானவர். அதிக உதிரப் போக்கும் காணப்பட்டதால் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாலை 5.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தான் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது நடுத்தர வயது மதிக்கத்தக்க இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி தன்னைப் பற்றைக்குள் இழுத்துச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த இரு வாரங்களுக்குள் யாழ். குடாநாட்டில் இளம் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும். நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமி ஒருத்தி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். உரும்பிராய் சிறுவர் இல்லத்தில் இருந்த மனநலம் குன்றிய சிறுமி ஒருத்தியும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

அதிகரித்துவரும் இத்தகைய வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு சமூக அமைப்புக்களும் சட்ட அமைப்புக்களும் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.