சாவகச்சேரி நகரசபைத் தலைவர் வீட்டின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்; நள்ளிரவு வேளையில் சம்பவம்
சாவகச்சேரி நகரசபைத் தலைவர் வீட்டின் மீது இனம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
சாவகச்சேரி நகர சபைத் தலைவரான இ.தேவசகாயம்பிள்ளை வீட்டின் மீது நேற்று நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் வந்த குழுவென்று வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியன சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நான்கு மோட்டார் சைக்கிளில் பெற்றோல் மற்றும் கற்கள், பொல்லுகளுடன் வருகைதந்த குழு ஒன்று நகரசபைத் தலைவரது வீட்டின் வெளிக்கதவால் உள் நுழைந்து வீட்டிக் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன் அங்கு நின்ற மோட்டார் சைக்கிளையும் பெற்றோல் ஊற்றிக் கொழுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
தாக்குதல் சத்தம் கேட்டு நகரசபைத் தலைவரும் அவரது குடும்பத்தினரும் வெளியே வந்து பார்ப்பதற்குள் அவர்கள் கொண்டுவந்த கற்கள் மற்றும் பெற்றோல் போத்தல்களை அவ்விடத்திலே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்திற்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றமும் அதன் கைக்கூலிகளுமே காரணாம் எம நகரசபைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்
அண்மைக் காலமாக சாவகச்சேரி சந்தை வெளிக்கதவுகள் பூட்டப்படுவது தொடர்பாக நகரசபைத் தலைவருக்கும் கைத்தொழில் வணிக மன்றத்திற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், அதன் எதிரொலியாக அப்பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள அரசியற் கட்சியின் பின்னனியில் தமது வீட்டுக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் நகரசபைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சாவகச்சேரி நகர மையத்தில் அமைந்துள்ள நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிள் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் கதவுகள் இரவு 7 மணிக்கு மூடுவது வழக்கம் எனினும் வர்த்தக நிலையங்களின் நலன் கருதி 8 மணிக்கு சந்தைக் கட்டடத் தொகுதியின் பிரதான கதவை மூடுவதற்கு நகரசபையானது தீர்மானம் மேற்கொண்டது.
ஆனால் வணிக மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நவீன சந்தையின் மேல்மாடியில் இருபுறங்களிலும் உள்ள கடைகளின் கதவுகள் 10 மணிவரை திறந்திருப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
அண்மைக் காலமாக நவீன சந்தையின் பிரதான நுழைவாயிற் பகுதியில் ஒருசிலர் விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடத்துள்ளமையினை அடுத்து சபைக் கூட்டத்தில் சந்தைக் கட்டடத் தொகுதியின் பிரதான கதவுகளை 8 மணியுடன் மூட தீர்மானிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் கடந்த வெள்ளிக் கிழமை இரவு 8மணிக்கு பிரதான நுழைவாயிற் கதவு மூடப்பட்டது அவ்வேளையில் அங்கு வந்த வணிகர் மன்றத் தலைவர் தலமையிலான குழுவினர் அங்கு நின்ற நகரசபை உறுப்பினரை தாக்க முற்பட்டதுடன் சிறிலங்கா காவல் துறையினரின் உதவியுடன் பிரதான நுழைவாயில் கதவு திறக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி நகரசபைத் தலைவரும் உறுப்பினர்களும் சாவகச்சேரி காவல் நிலையத்தை முறையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி நகரசபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.




தென்மராட்சி தனங்கிழப்பில் இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்து படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக இராணுவத்தை சேர்ந்த ஒருவர், ஈ.பி.டி.பி ஒருவர், ஆயுதக்குழுவைச்சேர்ந்த ஒருவருமாக மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 28வயதுடைய அற்புதமலர் சுப்பிரமணியம் கடந்த வருடம் நவம்பர் 13ஆம் திகதி காணாமல் போனார். பின்னர் இவ்வாண்டு ஜனவரி 25ஆம் திகதி கைவிடப்பட்ட இராணுவ காவலரண் ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக பெண் உரிமை அமைப்புக்களும், குளோபல் வோச் டோக் அமைப்பும் மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாவது சந்தேக நபர் தொக்கையன் என அழைக்கப்படும் இராணுவ சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவராவார். தொக்கையன் என்பவர் மீசாலையை சேர்ந்தவராவார்.
இரண்டாவது சந்தேக நபர் ஈ.பி.டி.பியை சேர்ந்த சுரேஷ் என தனங்கிழப்பு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முன்றாவது சந்தேக நபர் சண்முகம் ஜெயமோகன் என்பவர். இவர் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழு ஒன்றை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நெடுந்தீவில் சிறுமி ஒருத்தியை ஈ.பி.டி.பியை சேர்ந்த ஒருவன் பாலியல் பலாம்காரம் செய்து படுகொலை செய்திருந்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
















இளம்பெண் படுகொலை: இராணுவத்தினர் மீது விசாரணை !
11 April, 2012 Athirvu
இக்கொலை தொடர்பாக பெண் உரிமை அமைப்புக்களும், குளோபல் வோச் டோக் அமைப்பும் மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாவது சந்தேக நபர் தொக்கையன் என அழைக்கப்படும் இராணுவ சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவராவார். தொக்கையன் என்பவர் மீசாலையை சேர்ந்தவராவார்.
இரண்டாவது சந்தேக நபர் ஈ.பி.டி.பியை சேர்ந்த சுரேஷ் என தனங்கிழப்பு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முன்றாவது சந்தேக நபர் சண்முகம் ஜெயமோகன் என்பவர். இவர் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழு ஒன்றை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நெடுந்தீவில் சிறுமி ஒருத்தியை ஈ.பி.டி.பியை சேர்ந்த ஒருவன் பாலியல் பலாம்காரம் செய்து படுகொலை செய்திருந்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



யாழ்ப்பாணத்துக்கு இரணைமடு குடிதண்ணீர் மேலும் 29 மில்லியன் டொலர் நிதி கிடைத்தது; திட்டப் பணிப்பாளர் கூறுகின்றார் |
இரணைமடுவில் இருந்து வடக்கு, யாழ்.மாவட்டத்துக்கு குடிதண்ணீர் கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டத்துக்கு மேலதிகமாக இபாஃட் (IFAD) நிதி மூலம் 29 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைத்துள்ளது.
இதன் மூலம் நாம் முழுமையான நிதியைப் பெற்றுள்ளோம். 2016 இல் வடக்குப் பிரதேச மக்கள் இரணைமடு நன்னீரைப் பருகும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு கூறினார் யாழ்கிளிநொச்சி குடிதண்ணீர் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் எந்திரி தி.பாரதிதாசன்.
சாவகச்சேரி நகரசபையில் உலக குடிதண்ணீர் தினத்தையொட்டிய பெரும் நிகழ்வு நகரபிதா இ.தேவசகாயம் பிள்ளை தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந் தினராகக் கலந்து கொண்ட தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச்சபையின் முன்னாள் வடக்கு பிரதிப் பொது முகாமையாளரும் யாழ்கிளிநொச்சி, குடிதண்ணீர் விநியோகத்திட்டப் பணிப்பாளருமான எந்திரி தி.பாரதிதாசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
1985 இல் அலன் தம்பியினர் யாழ். குடா மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கான ஆரம்பக் கட்டத்திட்டத்தை முன்வைத்தனர். ஆனால் நாட்டின் நிலைமையால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. வடக்குக்கு குடிதண்ணீர் தேவை என்ற பிரச்சினை 2000 ஆம் ஆண்டில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
இதற்கான சாத்தியக்கூற்று கற்கைநெறி முன்வைக்கப்பட்டு 55 இற்கு மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் அமைச்சு மட்ட கருத்தரங்குகள் முன்வைக்கப்பட்டன. முதற்கட்டமாக முன்னாள் நீர்வள சபை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா 164.04 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுத் தந்தார். தற்போதைய தேசிய நீர்வழங்க சபை அமைச்சின் இபாஃட் (IFAD) நிதி மூலம் 29 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுத்தந்துள்ளனர்.
இதன் மூலம் வடக்கு மக்களின் குடிதண்ணீர்த் தேவைக்கான நிதி கிடைத்துள்ளது. இந்தப் பெரும் திட்டம் மூலம் குடிதண்ணீர் கிடைக்கும் அதே நேரம், நாம் நிலத்தடி நீரையும் பாதுகாக்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.
தொண்டமானாறு நன்னீர்த் திட்டம் வழுக்கியாற்று திட்டம் தொடர்பாகவும் பெரும் முன்னெடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசர தேவை எமக்குள்ளது. நாம் கிளிநொச்சி மக்களின் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுகின்ற அதேநேரம், எமது தேவையையும் கிளிநொச்சி யாழ். அரச அதிபர்களின் ஒத்திசைவுடன் நிறைவேற்றுகின்றோம். என்றார்.
இதில் கலந்து கொண்ட நகரசபை செயலாளர் சு.புத்திசிகாமணி கூறியதாவது:
2,000 கோடி ரூபா செலவில் கிளிநொச்சி முதல் புங்குடுதீவு வரை குடி தண்ணீர் கொண்டு செல்லப்படவுள்ளது.
இலங்கையில் அதி கூடிய செலவில் முன்னெடுக்கப்படும் யாழ் கிளிநொச்சி குடிதண்ணீர் திட்டம் 2016 ஆம் ஆண்டு முடியும். திட்டத்தை திறம்படச் செய்வதற்கு வடக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகள் திணைக்களங்களும் கூடிய பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் கெயர் சர்வதேச திட்ட முகாமையார் திருமதி ஜோய் மோசஸ் ஞானேஸ்வரன், வேலணை பிரதேச சபை செயலாளர் செ.ரமேஷ், சாவகச்சேரி நகரசபை உப நகரபிதா கு.சதாசிவமூர்த்தி, சனசமூக அதிகாரி திருமதி செ.ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.Uthayan10-4-12
|










தூக்கத்தில் இருந்தவர் எழுந்து ஓடினார்: தப்பின குதிரை வாகனங்கள் |
தூக்கத்தில் இருந்த ஒருவர் எழுந்து வீதியில் கத்திக்கொண்டு ஓடியதால் அயலிலுள்ளவர்கள் வீதிக்கு ஓடிவந்தனர்.
இந்நிலையில் அயலிலுள்ள ஆலயம் ஒன்றில் குதிரை வாகனத்தை திருட முயன்ற இருவர் ஹெல்மெட்டுக்களையும் விட்டுவிட்டு மோட்டார் சைக்கியில் ஏறித்தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் அண்மையில் சாவகச்சேரி கல்வயல் வேதவன பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பின் இரவு 2 மணியளவில் வைக்கப்பட்டிருந்த குதிரை வாகனத்தை கழற்றிச் செல்ல முற்பட்டுள்ளனர். இதேவேளை ஆலயத்திலிருந்து 200 மீற்றருக்கு அப்பால் உள்ள வீடொன்றில் நித்திரையாய் இருந்த ஆலய பக்தர் ஒருவர் திடீரென்று படுக்கையிலிருந்து எழுந்து கத்திக்கொண்டு வீதியில் ஓடினார்.
இவரது சத்தத்தை கேட்ட அயலவர் எழுந்து இவருக்கு பின்னால் ஓடினர். சத்தம் போட்டுக்கொண்டு ஓடிவருவதை அவதானித்த திருடர்கள் இருவரும் தமது ஹெல்மெட்டையும் குதிரை வாகனத்திலிந்து கழற்றிய கால்களையும் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகனத்தினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர். பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டனர். வீதியில் கத்திக்கொண்டு ஓடிவந்தவர் தனக்கு என்ன நடந்தது என்று கூறியுள்ளார்.
Uthayan 3.4.12
|

நீதிமன்ற ஊழியரை எச்சரித்தவருக்கு அபராதம் |
நீதிமன்ற உத்தியோத்தர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட நபரை சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் கடுமையாக எச்சரித்ததுடன் உத்தியோகத்தரை மன்னிப்பு கோர வேண்டுமென உத்தரவிட்டு ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதித்தார்.
இந்தச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: நீதிமன்றுக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் வரும் வேளையில் நீதிமன்றின் உத்தரவின் பேரில் வழக்குகளின் தன்மைக்கேற்றவாறு வாகனப் புத்தகங்கள் தடுத்து வைக்கப்படும். கடந்த மாதம் நீதிமன்ற அலுவலகத்துக்கு வந்த ஒருவர் வழக்குத் தொடர் பாக சமர்ப்பிக்கப்பட்ட வாகன உரிமைப் புத்தகத்தினை வழங்குமாறு கோரியுள்ளார். இவரது புத்தகம் நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டமைக்கான பதிவுகள் பதிவேடுகளில் காணப்படாத போதிலும் அதனை உரிய இடங்களில் தேடிய போது காணவில்லை. இந்தவேளை நீதிமன்ற உத்தியோகத்தர்களை பொறுப்பற்ற வகையில் கடமையாற்றுவதாக அவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த நபர் ஏசி விட்டுச் சென்றுள்ளார். ஒரு வாரத்தின் பின்னர் இந்த வழக்கின் தவணை தொடர்பாக கேட்க வந்த இந்த நபரிடம் வழக்கின் இலக்கம் என்னவென்று உத்தியோகத்தர்கள் கேட்டுள்ளனர். அப்போது வெளியே நின்ற ஒருவர் வைத்திருந்த பையினுள்ளிருந்து வழக்கின் இலக்கத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து தவணை பற்றித் தெரிந்து கொண்டார். இவரது செயற்பாட்டில் சந்தேகங்கொண்ட நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் வெளியில் நின்றவரின் பையை வாங்கிப் பார்த்த போது, அதனுள் மன்றில் பாரப்படுத்தியதாகக் கூறப்பட்ட வாகனப் புத்தகம் இருந்ததைக் கண்டு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தருக்கு தெரிவித்தார். இது தொடர்பாக இந்த நபரை விசாரித்த போது பதிவுப் புத்தகம் வீட்டில் இருந்ததாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் நீதிமன்றின் கவனத்துக்குச் சமர்ப்பித்தார். இந்த நபருக்கு எதிரான வாகன வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர் உத்தியோகத்தரால் சமர்ப்பித்த அறிக்கையினை விசாரித்த நீதிவான் இவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தவிட்டு, இந்த நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு உத்தரவிட்டார்.(Uthazýan 1.4.12) |