2.6.12

செய்திகளில் ஊரும் அயலும்-June 2012

Jun 29, 2012

இந்துக்கோவிலை அகற்றி புத்தவிகாரை அமைக்க சாவகச்சேரியில் நடவடிக்கை!

ஏ –9 வீதியில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப்பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்தர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது.

சாவகச்சேரி பொலிஸாரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற்பாட்டை சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதுவரை காலமும் பொதுமக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ள பகுதிகளில் சிறு புத்தர் சிலை அமைத்து அவர்களுடைய வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன் பின்னர் பொதுமக்களுடைய இடங்களைச் சுவீகரித்து இவ்வாறான புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுவந்தது.

ஆனால் தற்போது வழிபாடுசெய்துவரும் இந்துக் கோவிலொன்று உடைக்கப்பட்டு அக்கோயில் அமைந்திருக்கும் இடத்தில் புத்தகோயில் அமைக்கப்படுகிறது. இது இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் அதேவேளை பௌத்த பேரினவாதத்தின் மிதமிஞ்சிய செயலாகவே கருதப்படவேண்டும் என்று மேற்படி அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
முற்றுமுழுதாக குறித்த பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் மிகவும் விசாலமாக அமைக்கப்பட்டுவரும் இப்பௌத்த விகாரை அமைப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். முன்னர் அமைந்திருந்த குறித்த இந்து ஆலயத்தினை மீண்டும் பழைய இடத்தில் முன்பிருந்த விதமாக அமைக்கவேண்டும் என்றும் இந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. (pathivu.com)


பிரசவவேளை மனைவியுடன் கணவனும் இருக்கும் திட்டம் முதல் முறையாக சாவகச்சேரி வைத்தியசாலையில் 

சிறப்பு மகப்பேற்று மருத்துவரும் நியமனம்

 பிரசவத்தின் போது மனைவிக்கு அருகே கணவனும் இருக்கும் முன்னோடித் திட்டம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முதல் முறையாக நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இலங்கை அரச வைத்தியசாலைகளில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது முதல்முறையாகும். அந்த வகையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முதல் தடவையாக இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
 இந்த வைத்தியசாலைக்குப் புதிதாக நியமனம் பெற்றுள்ள மகப்பேற்றுத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள மருத்துவர் மூலம் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மகப்பேற்றுத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரி சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். றாகம வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய கலாநிதி ரி.கிருஷ்ணவேணி என்பவரே வைத்தியசாலை மகப்பேற்றுப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளவராவார். மகப்பேற்றுத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்று சித்திபெற்ற ஐந்து பேரில் ஒருவரான இவர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் முயற்சியினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டு கடந்த 25ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
 சிறப்பு மகப்பேற்று வைத்திய அதிகாரி கடமையை பொறுப்பேற்றதையடுத்து பல்வேறு செயற்றிட்டங்கள் வைத்தியசாலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. வைத்தியசாலையில் நடைபெற்று வரும் சுக வனிதையர் சிகிச்சைப்பிரிவு, பெண் நோயியல் சிகிச்சைப் பிரிவு, பிரசவத்திற்கு பிற்பாடான சிகிச்சைப் பிரிவு, பிரதி திங்கட்கிழமைகளில் கர்ப்பிணிகள் சிகிச்சைப் பிரிவு, குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரிவு போன்ற சிகிச்சைப் பிரிவுகள் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




கண்டக்காடு புனர்வாழ்வு முகாமில் இலங்கையின் மிக உயரமான மனிதர் _
Virakesari 6/20/2012 4:30:06 PM


  இலங்கையிலே உயரத்தில் மிகவும் கூடிய மனிதராகக் கருதப்படுபவர் தற்போது பொலனறுவை மாவட்டத்திலுள்ள கண்டக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வு பெற்றுவரும் ஒரு முன்னாள் போராளியாவார்.

குணசிங்கம் கஜேந்திரன் என்ற இந்த முன்னாள் போராளியின் உயரம் 7 அடி 3 அங்குலமாகும். இவர் 2009 மே 17ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்து பூசா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சாவகச்சேரியை சேர்ந்த 33 வயதான கஜேந்திரன், 3 வயதுடைய ஒரு குழந்தைக்கு தந்தையுமாவார். கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி கண்டக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு இவர் மாற்றப்பட்டார்.

இவர் தனது உயரத்தினால் ஏனையோரைப் போல பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை எனவும் வீடுகளில் உள்ள கதவுகள் வழியாகக் கடந்து செல்ல முடியாது குனிந்து செல்ல வேண்டியுள்ளது என்பதால் தான் பல சிரமங்களை எதிர் நோக்கவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.



உடல்நல ரீதியாகவும் இந்த உயரத்தினால் சிரமப்பட வேண்டியுள்ளது எனக் கூறிய கஜேந்திரன் அதிக நேரம் நிற்கவோ, நடக்கவோ, அமர்ந்திருக்கவோ முடியவில்லை. வெளியே செல்லும் போது மற்றவர்கள் நிமிர்ந்து பார்ப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறினார்.

எனினும் , இந்த உயரம் தனக்கு சிலவேளைகளில் உதவியாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு உயரமான பொருளை வைக்காமலேயே மின்குமிழ்களை மாற்ற முடிவதாகக் கூறுகிறார். ஓராண்டுக்கு கண்டக்காடு முகாமில் புனர்வாழ்வு மற்றும் தொழிற்பயிற்சியைப் பெற்ற பின்னர் இவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தென்மராட்சியிலும் 300 ஏக்கர் நிலம் பறிபோகிறது;
பிரதேச செயலர்களின் முடிவே இறுதியான
து
news
 யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளில் 61 ஏக்கர் நிலத்தைக் கபளீகரம் செய்வதற்கு முயன்றது போலவே தென்மராட்சிப் பிரதேசத்திலும் சுமார் 300 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு இராணுவம் முன்முயற்சிகளை எடுத்துள்ளது. 

தென்மராட்சியில் தற்போது இராணுவம் நிலை கொண்டுள்ள 41 காணித் துண்டங்களைத் தமக்கு உரிமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தென்மராட்சிப் பிரதேச செயலரை இராணுவ அதிகாரிகள் கோரியிருக்கின்றனர்.
1996ஆம் ஆண்டு முதல் தாம் நிலை கொண்டுள்ள தனியார் காணிகளையும் தமக்கு உரிமைப்படுத்துமாறு இராணுவம் கோரியுள்ளது. இவ்வாறு இராணுவம் தங்கியுள்ள வீடுகள், காணிகளின் உரிமையாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் தற்போது வாடகை வீடுகளில் தங்கியிருக்கிறார்கள்.
இதேவேளை யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளில் அபகரிக்கப்பட உள்ள 61 ஏக்கர் நிலமும் 511ஆவது படையணியின் தேவைக்கு மட்டுமானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ஏனைய படையணிகளின் பயன்பாட்டில் உள்ள வேறு காணிகளும் இதேபோன்று அபகரிக்கப்பட உள்ளன. 
இதேவேளை, இராணுவத்தினர் கோரும் காணிகளில் பெரும்பாலானவற்றை அரச திணைக்களங்கள், அலுவலகங்கள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான காணிகளை வழங்குவதா இல்லையா என்று இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் அந்தந்த பிரதேச செயலர்களே கொண்டிருக்கின்றனர் என்று கொழும்பிலுள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"பிரதேச செயலர்கள் உறுதியாக மறுக்கும் பட்சத்தில் படையினரால் அந்தக் காணிகளைப் பெறமுடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை. மீறி காணிகளை அபகரிப்பதாயின் அனைத்தையும் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் சுவீகரிக்க முடியும்'' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.  (Uthayan 10-6-12)



சாவகச்சேரி நுணாவில் கிழக்கில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

காலையில் உந்துருளியால் விழுந்து ஏற்பட்ட காயத்துக்கு மருந்து கட்டுவதற்காக வைத்தியசாலைக்கு துவிச்சக்கரவண்டியில் வந்தவர் இடைவழியில் பேருந்துடன் மோதுண்டு சாவடைந்தார்.
இந்தச் சம்பவம் நேற்றுக் காலை 9.30 மணிக்குச் சாவகச்சேரி நுணாவில் கிழக்கில் இடம்பெற்றது. ஒழுங்கையில் இருந்து ஏ9 வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த போது அந்த வழியே வந்த வாகனம் ஒன்றில் ஏற்றி சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி நுணாவில் மத்தியைச் சேர்ந்த சரவணமுத்து பரமநாதன்(வயது 55) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
இவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேறட்கொண்டு வருகின்றனர்.(pathivu 5.6.12)


பஸ்ஸுடன் சைக்கிள்மோதி விபத்து
 – மீசாலை வாசி பலி
சாவகச்சேரியில் நேற்று பயணிகள் போக்குவரத்து பஸ்ஸுடன் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் சைக்கிளில் சென்ற நபர் பலியாகியுள்ளார். மந்துவில்– மீசாலை வடக்கைச் சேர்ந்த ச. பரமநாதன் (வயது 55) ௭ன்பவரே விபத்தில் பலியானவராவார்.
(Virakesari 4.6.12)

பேருந்துக்காக காத்திருக்கும் தென்மராட்சி மக்களும்;
இருந்தால் விடுவோம் எனக் கூறும் அதிகாரிகளும்
news
தென்மராட்சி பகுதிகளுக்கிடையிலான இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள் பெரும்பாலும் மதியத்துடன் தமது பயணத்தை நிறுத்தி விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அண்மைக் காலமாக தென்மராட்சி பிரதேசத்தினுடான போக்குவரத்தில் இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்துகள் 2 மணிக்கு தமது பயணத்தினை நிறைவு செய்துகொண்டு மீண்டும் 5 மணிக்கே பயணத்தினை ஆரம்பிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
5 மணிக்கு ஆழிவளை நோக்கி புறப்படும் பேருந்தும் சிலவேளைகளிலே பயணத்தில் ஈடுபடுவதில்லை இதனால் பல மணிநேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக நேரக் கணிப்பாளரிடம் கேட்டபோது உங்களுடைய பிரதேசத்திற்கு விடுவதற்கு பேருந்துகள் இல்லை எனவும் இருந்தால் விடுவோம் என அக்கறை இல்லாமல் கூறுகின்றனர்.
இது தொடர்பாக கோண்டாவில் தலமையகத்திற்கு மக்கள் பலரும் தொடர்பு கொண்டு கேட்ட போது தாம் இது தொடர்பாக கதைப்பதாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டிப்பதாகவும்,சில வேளைகளில் இணைப்பை துண்டித்து விடுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிலவேளைகளில் தூர இடங்களுக்கான பேருந்துகளில் கொடிகாமம் உட்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் ஏற முற்பட்டால் இதில் நீங்கள் ஏற அனுமதி இல்லை என்று இறக்கிவிடும் சாரதிகளும் அவ்வாறு ஏறியவர்களை உரிய தரிப்பிடங்களில் இறக்காமல் தூரமாக கொண்டு சென்று இறக்கும் சாரதிகளின் நடவடிக்கையும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.