சாவகச்சேரி வைத்தியசாலையில்; இட நெருக்கடியால் திண்டாடும் நோயாளர் |
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெறும் கிளினிக்குகளில் இடநெருக்கடி ஏற்படுவதால் இருப்பதற்கு இடமின்றி நோயாளர்கள் திண்டாடும் நிலை ஏற்படுகிறது என்று பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி உதயனுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது கிடைத்த தகவல்கள் வருமாறு:
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கண், தோல், குழந்தைகள், பல் சார்ந்த கிளினிக்குகள் வைத்தியசாலை நிர்வாக அலகுக் கட்டத்தின் மேல் மாடியிலும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், போசாக்கு குறைந்த பிள்ளைகள் போன்ற கிளினிக்குகள், சிறுவர் விடுதியிலும் இடம்பெறுகின்றன.
உளநலம், கசம், புற்றுநோய் ஆகியவற்றுக்கான கிளினிக் அதற்கான கட்டடத்திலும், நீரிழிவு, பொது மருத்துவம் உட்பட ஏனைய கிளினிக்குகள் தனியான கட்டடத்திலும் இயங்குகின்றன.
நிர்வாக அலகு, குழந்தைகள் விடுதி, உளநலம் உட்பட்ட கிளினிக்குகள் இடம்பெறும் இடங்களில் தலா 50 தனியான இருக்கைகளும், பொது மருத்துவம், நீரிழிவு உட்பட்ட கிளினிக்குகள் நடைபெறும் இடத்தில் தலா 6 பேர் வீதம் இருக்கக் கூடிய 18 வாங்குகளும் காணப்படுகின்றன.
முறைப்பாடு தெரிவித்த நபரின் கூற்றுப் பிரகாரம் அது பொது மருத்துவக் கிளினிக் நடைபெறும் இடம் என்று நினைக்கிறோம். நீரிழிவு மற்றும் பொது மருத்துவம் ஆகிய கிளினிக் நடைபெறும் வேளைகளில் அங்கு வரும் நோயாளர்களின் நலன்கருதி பொது வைத்திய நிபுணர் உட்பட ஐந்து வைத்திய அதிகாரிகள் கடமையில் உள்ளனர்.
நோயாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு கிளினிக் கொப்பியில் எழுதப்படுகிறது. காலை 8 மணி குறிப்பிட்டிருக்கும் ஒருவர் காலை 7.30 மணிக்கு வந்து கொப்பியை அடுக்கி விட்டு வாங்குகளில் வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கொப்பிகளை எடுத்து பதிவுகள் செய்தபின்னர் வரிசைக்கிரமமாக உள்ளவர்களிடம் வழங்குவார். ஒரு மணித்தியாலத்தில் 50 தொடக்கம் 60 நோயாளர்கள் சோதிக்கப்பட்டு மருந்துகள் எழுதப்படும்.
9 மணியெனப் பதிவு செய்தவர்கள் 8.30 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் வந்து கொப்பி அடுக்க வேண்டும். இதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு நோயாளர்கள் சிரமமின்றிச் சிகிச்சை பெறமுடிகிறது.
கிளினிக் கொப்பி பார்த்து குறிப்பிட்டுள்ள நேரம் குறிப்பிட்ட இடத்தில் கொப்பிகளை அடுக்குவதற்கு ஓர் உத்தியோகத்தர் கடமை புரிகிறார். 11 மணிஎன நேரம் குறிப்பிட்ட ஒருவர் கொப்பியைக் கொண்டு காலை 8 மணிக்கு வருவாராயின் அவர் அங்கு குறித்த நேரம் வரை காத்திருக்க வேண்டும்.
நேரம் முந்தி வருபவர்கள் கிளினிக் மருந்து கொடுக்கும் பகுதி விறாந்தையில் தங்கி தமது நேரம் வரும் போது இருக்கையில் அமர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறாக நேரம் தவறி வருபவர்களே நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது என்று கூறப்பட்டது.
11 மணிஎன நேரம் குறிப்பிட்ட ஒருவர் கொப்பியைக் கொண்டு காலை 8 மணிக்கு வருவாராயின் அவர் காத்திருக்க வேண்டும்.
|
நாவற்குழியில் சிங்களவரின் கட்டடங்கள்; பிரதேச சபை கண்டுகொள்ளாதமை ஏன்? |
நாவற்குழியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சிங்கள மக்களால் நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும் அதனைச் சட்ட ரீதியாகத் தடுத்து நிறுத்துவதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரிப் பிரதேச சபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமை குறித்துக் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்கள் சிறு மதில் கட்டுவதாக இருந்தாலும் பிரதேச சபையின் அனுமதியின்றி அந்தப் பணியை மேற்கொள்ள முடியாது. ஆனால் சிங்கள மக்கள் வீடுகள், பொதுநோக்கு மண்டபம், தண்ணீர்த்தாங்கி என்பவற்றைப் பிரதேச சபையின் அனுமதியின்றி அமைத்துள்ள போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறும் நோக்குடன் 54 சிங்களக் குடும்பங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தன. ஆரம்பத்தில் யாழ். ரயில் நிலையத்தில் தங்கியிருந்த அவர்கள் பின்னர் நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் அத்துமீறிக் குடியமர்ந்தனர்.
ஆரம்பத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் தற்காலிக கொட்டில்கள் அமைத்திருந்த சிங்கள மக்கள் கடந்த வருட இறுதியில் நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அரச காணியிலும் சரி தனியார் காணிகளிலும் சரி எந்தவொரு கட்டடங்களை அமைப்பதாயினும் அதற்கு அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள பிரதேச சபைகளின் அனுமதி பெறப்படுவது கட்டாயமானதாகும்.
ஆனாலும் நாவற்குழியிலுள்ள சிங்கள மக்கள் சாவகச்சேரி பிரதேச சபையின் எந்தவிதமான அனுமதியையும் பெறாமல் தமக்கான நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிதண்ணீர்த் தாங்கி, பொதுநோக்கு மண்டபம் என்பன அனுமதி பெறாமல் அங்கு ஏற்கனவே அமைத்து முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 20 வீடுகள் சுவர் எழுப்பப்பட்ட நிலையிலும், 40 வீடுகள் அத்திபாரம் வெட்டப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.
சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மேற்படி கட்டடங்களுக்கு எதிராகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரி பிரதேச சபையினால் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பாக சபையின் தவிசாளர் க.துரைராசாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் அதனைக் கவனிப்பதாக அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபையின் செயலரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் அனுமதி பெறவில்லைத்தான். நாம் வீடமைப்பு அதிகார சபைக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
நீங்கள் இதுவரை வீடமைப்பு அதிகார சபைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையா என்று கேட்டபோது, நீங்கள் அதனைத் தலைவரிடம் கேளுங்கள் என்று கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.
சாதாரண மக்கள் தமது வீட்டில் சிறிய சுவர் எழுப்பினாலும், அதற்கு அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கும் பிரதேச சபையினர் சிங்கள மக்களுக்கு மட்டும் சலுகை காட்டுவதாக சாவகச்சேரிப் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
|
யாழ். குடா நாட்டின் பல பகுதிளிலும் இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அத்துடன் யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் தோறும் நேற்றுக்காலை தேசிய கொடி ஏற்றப்பட்டது.
தென்மராட்சி பிரதேசத்தில் அரச திணைக்கள அலு வலகங்கள், கூட்டுறவு அலுவலகங்கள், வங்கிகள், பொலிஸ் நிலையங்கள், படைமுகாம்கள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களிலும் திணைக்களத் தலைவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
சாவகச்சேரி, கொடிகாமம், கைதடி ஆகிய பிரதேசங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு காணப்பட்டன.
நேற்று பொது விடுமுறை தினமாக இருந்த போதிலும் அனைத்து அலுவலகங்களிலும் அனைத்து தர உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
கொடியேற்ற நிகழ்வு முடிவுற்றதும் சுதந்திர தின உரை திணைக்களத் தலைவர்களால் நிகழ்த்தப்பட்டன.
சாவகச்சேரி நகரப் பகுதியில் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத் தலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்வில் வர்த்தகர்கள், படையினர், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறவழிப்போராட்டக் குழுவின் அமைப்பாளராக நான்கு தசாப்தகாலம் பணியாற்றிய திரு எம்.கே. ஜீவகதாஸ் இயற்கை எய்தினார். அது குறித்த செய்திகளும் அவர் மோகனதாஸ் ச.ச.நிலையத்திறப்பு விழாவின் போது எழுதிய வாழ்த்துச்செய்தியும்இங்கு இணைக்கப்பட்டுள்ளன.