
தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
03/11/2007.
எனது அன்பான மக்களே!
சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காண முடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.
தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.
தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.
நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி
எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!
கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!
உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் உளமெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைவர் றொபேர்ட் ஈவான்ஸ் இரங்கல்
சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து அதிர்ச்சியும் வருத்தம் அடைந்தேன். ஆனால் இருதரப்பும் மேலும் போரில் மூழ்க வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். நான் சு.ப.தமிழ்ச்செல்வனை நன்கு அறிவேன். கிளிநொச்சியிலும் பிரசெல்ஸ்ஸில் உள்ள எமது ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் அவரை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.
அவர் எப்போதும் நட்புடன் பழகியவர். தமிழ் மக்களினது அபிலாசைகளை தனது நெஞ்சில் சுமந்தவர். இலங்கை முழுமைக்குமே அமைதி முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்திருந்தவர்.
அவரது மரணம் குறித்து மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைகிறேன். தமிழ்ச்செல்வனின் துணைவியார் மற்றும் குழந்தைகளுக்கும் பாரிய இழப்பைச் சந்தித்திருக்கும் தமிழ் மக்களுக்கும் எமது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறிலங்கா இராணுவத்தின் இத்தாக்குதல் குறித்து நான் திகைப்படைகிறேன். அமைதி முயற்சிகளை முன்னெடுக்க இந்த வன்முறையும் இரத்தக்களறியும் எப்படி உதவும்?
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கிறேன். சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு தீர்வு காண முன்வர வேண்டும் என்று மகிந்த ராஜபக்சவை கேட்டுக் கொள்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோர்வே
எதிர்விளைவுகள்; சொல்ஹெய்ம் கவலை
இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் யுத்தத்தின் எதிர்விளைவுகள் குறித்து சமாதான அனுசரணையாளரான நோர்வே ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருப்பதால் அமைதி குன்றிய நிலையில் இருப்பதாகத் தோன்றும் நோர்வேயின் அமைச்சரும் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளின் அனுசரணையாளருமான எரிக் சொல்ஹெய்ம் இலங்கையின் தற்போதைய நிலைமைகளின் எதிர்விளைவுகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருப்பதாக நோர்வேயின் என்.ரி.பி. செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சமாதான முயற்சிகளில் நாங்கள் அனுசரணையாளராக செயற்படுவதற்கு விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே அரசாங்கத்திற்குமிடையில் தமிழ்ச்செல்வன் முக்கியமான தொடர்பு மையமாக விளங்கினார் என்று சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசன்
இதேவேளை, இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக முன்னர் இருந்த நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசன் கருத்து தெரிவிக்கையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய தமிழ்ச்செல்வன், சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது முக்கியமான பங்களிப்பினை வழங்கியவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவு செய்தியானது உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கிறது.
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் விடுதலைப் போராட்டமாகி முகிழ்த்துக் கிளம்பி மும்முரமாய் நடந்து வரும் இக்காலகட்டத்தில், நேற்று ஈழத்திலிருந்து வந்த செய்தி, உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கும் துன்பச் செய்தியாகும்.
வான் வழித் தாக்குதல் காரணமாக, பிரிகேடியர் தமிழ்ச்செல்வனும், லெப்டினன்ட் கர்னல் அன்புமணி (எ) அலெக்ஸ், மேஜர் முகுந்தன், கேப்டன் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், வாகைக்குமரன் ஆகிய தளபதிகளும் கொல்லப்பட்டனர் என்ற செய்தி தமிழர்களை மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்ட அனைவருக்கும் நெஞ்சுருக்கும் செய்தியாகும்!
அரசியல் மேதை ஆன்டன் பாலசிங்கம் மறைந்த நிலையில், அவ்விடத்தைப் பெரும் அளவில் நிரப்பி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சிந்தனையாளராகவும், அமைதிக்குழுவிடம் அடக்கத்தோடும், உறுதியோடும் தமது உரிமைகளை எடுத்து வைத்து பேச்சுவார்த்தை களைத் திறம்பட நடத்திய நாயகருமான மானமிகு தமிழ்ச்செல்வன் மறைவு ஒரு பேரிடி போன்ற செய்தி!
முன்பு ஒரு முக்கிய கட்டத்தில் தளபதி கிட்டுவையும், மற்ற முன்னணியினரையும் இழந்த கொடுமைக்கு இயற்கை அவர்களை ஆளாக்கியது.
அதன்பிறகு ஆன்டன் பாலசிங்கம், அதன்பிறகு இப்படி ஒரு ஈடுசெய்ய இயலாத இழப்பினால் ஏற்பட்டுள்ள சோகம்!
அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் எய்தியது லட்சியப் போரில், விடுதலைப் போரில்- வீரமரணங்கள்! அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள்!
அவ்வியக்கத்திற்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும், ஈழத் தமிழர் பெருங்குடும்பத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
போர் முனையில் இதுபோன்ற அதிர்ச்சிகள் வந்தாலும், லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் பயணத்தினை தொய்வின்றி தொடர்ந்து, எதற்காக அம் மாவீரர்கள் தங்களை விதைத்துக் கொண்டார்களோ, அவர்தம் லட்சியத்தினை செயலுருவில் காண உலகத் தமிழர்கள் ஆதரவு காட்டும் உணர்வுகளாக அனுதாபங்களை மாற்றுவார்களாக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கண்டனம்
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை வான் படையின் குண்டு வீச்சின் மூலம் கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
சில நாட்களுக்கு முன்னால் தான் விடுதலைப் புலிகள் தேர்தல்களில் நேரடியாக ஈடுபடுவதற்கு சட்டம் கொண்டு வரப்போவதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு பிறகு இந்த கொடுஞ்செயலை செய்துள்ளது. இதிலிருந்தே இலங்கை அரசு நம்பத்தகுந்த அரசு அல்ல என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள முடியும்.
இலங்கை தீவு பௌத்த மதத்தினருக்கு மட்டுமே சொந்தம் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தும் சிங்கள அரசை அடையாளம் கண்டு இந்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழ்ச்செல்வனை இழந்து துயருரும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எனது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிலங்கா அரசின் படுபாதகச் செயலை அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டும்
வைகோ
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரை வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தின் படுபாதகச் செயலை அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டு அறிக்கை:
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தது உள்ளம். தமிழ் ஈழ மக்களின் உரிமைக்காக, தாய் மண்ணின் விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துப் பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன், சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தோடு, ஈழத்தின் விடுதலைப் போரில் பல போர்க்களங்களில் மரணத்தை எதிர்கொண்டு போராடி உள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்க் காப்பாளர்களுக்குள் ஒருவராக, 1980-களில் திகழ்ந்தவர்.
அரசியல் பிரிவு தலைவர்
விடுதலைப் புலிகளின் சாவகச்சேரி படைப்பொறுப்பாளராகவும், பின்னர் யாழ்ப்பாணப்படை பொறுப்பாளராகவும் திறமையாக பணியாற்றி, ஆனையிறவு வெற்றிப் போரில் மரண காயமுற்று மீண்டார். யாழ்தேவியில் நடைபெற்ற யுத்தகளக் காயங்களினால் கால் ஊனமுற்றார்.
1993 முதல் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராகச் செயல்பட்டார். தமிழ் ஈழத்தின் தியாகமும், தீரமும், வீரமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்கு தலைமை ஏற்று, நோர்வே அரசு முன்னின்று நடத்திய பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து பங்கு ஏற்று வந்தார். இலங்கையிலும் அயல்நாடுகளிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பங்கு ஏற்றார்.
காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
உலக நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள், ஐ.நா. மன்றத்தின் பிரதிநிதிகள், இலங்கையில் தமிழர் பகுதிக்கு வரும் போதெல்லாம் அவர்களை புலிகளின் தரப்பில் சந்தித்து வந்தார். இயக்கத் தலைமையிடம் கொண்ட ஈடற்ற விசுவாசமும், பிரச்சினைகளை நுணுக்கமாக அலசி ஆராயும் மதிநுட்பமும், எதிரிகளை திணறடிப்பதோடு, கேட்பவர்களைத் தன்பக்கம் ஈர்க்கும் வாதத்திறமையும் பெற்றவர். தியாக வாழ்வை மேற்கொண்டவர் தமிழ்ச்செல்வன்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காட்டுமிராண்டித்தனமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி, சமாதான பேச்சுவார்த்தையை சமாதிக்கு அனுப்பியது சிங்கள அரசு தான் என்பது தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்ததன் மூலம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.
கண்டிக்க வேண்டும்
தமிழ் குலத்தின் பிஞ்சுக் குழந்தைகளை, செஞ்சோலையில் குண்டு வீசிக்கொன்று ஒழித்த சிங்கள அரசு, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேவாலயத்திலும் நடுவீதியிலும் சுட்டுக்கொன்ற சிங்கள அரசு, தமிழ்ச்செல்வன் இருந்த நிலவறைத் தளத்தின் மீது சக்தி வாய்ந்த இராட்சதக் குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தி இப்படுகொலையைச் செய்து உள்ளது.
இப்படி இனப் படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு, பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதம் வழங்கி வரும் சூழ்நிலையில், இந்திய அரசாங்கமும் ராடர்களையும், சக்தி வாய்ந்த இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் வழங்கியது தமிழ் இனத்திற்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இந்த துரோகத்தில் ஈடுபடும் இந்திய அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வரும் சிங்கள அரசு, தற்போது தமிழ்ச்செல்வனை கொன்ற படுபாதகச் செயலை உலக நாடுகள் கண்டித்திட முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இரங்கல்
தமிழ் ஈழத்தின் தியாகப் புதல்வன் தமிழ்ச்செல்வன் மறைவினால் கண்ணீரில் தவிக்கும் தமிழ் ஈழ மக்களுக்கும், வீரச் சகோதரனைப் பறி கொடுத்து விட்டு வேதனையில் துடிக்கும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கும், ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தம்பி தமிழ்ச்செல்வா! உன்னை எரிக்கவில்லை...ஏற்றியிருக்கிறோம்
பாரதிராஜா
ஒரு விடிவெள்ளியைக் கொன்று புலர்ந்த இந்த வெள்ளி விடியாமலே இருந்திருக்கலாம்
ஒரு அட்சயப் பாத்திரத்தை பிச்சைக்காரர்கள் தின்று தீர்க்க இந்த நாள் விழிக்காமலே இருந்திருக்கலாம்.
மரணத்தைக் கண்டு அஞ்சியதில்லை தம்பிகள்! அதுதான் அவர்களுக்கு முகவரி
வலிகளும் அவர்களுக்கு புதிதல்ல! அவர்களின் இரணங்கள்- சாதாரணம்! தழும்புகளை நெஞ்சில் சுமந்த வீர மறவர்கள்!
என்றாலும் அவர்கள் கண்ணீரில் நனையும்போது இங்கே கரிக்கிறது- அங்கே அவர்கள் காயப்படும்போது இங்கே குருதி கொதிக்கிறது
வான்வழியே விழுந்தது வெடி அல்ல- எங்கள் நெஞ்சில் விழுந்த இடி!!
தம்பி தமிழ்ச்செல்வா! நீ மாபெரும் இயக்கத்தின் அரசியல் வழிகாட்டி மட்டுமல்ல
தம்பி பிரபாகரனைக் காண வீரமண்ணிற்கு எமை அழைத்துச் சென்று விருந்தோம்பி உபசரித்து மறத் தமிழ் மக்களின் மற்றோர் உலகை எனக்குக் காட்டியவனும் நீ தான்!
அதனால்தான் அன்றே என் அரசியல் காவியத்திற்கு உன் பெயரிட்டேனோ?
ஈழத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை, சமாதானப் பாதை நோக்கிய பயணத்தை உலகெங்கிலும் உள்ள அரசியல் அரங்குகளில் ஓங்கி ஒலிக்கச் செய்த தம்பியே! உமது இழப்பு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது- உலக உருண்டையின் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் தமிழர்கள் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அந்தோ!
அன்று சிங்கத்தை இழந்தோம்!
இன்று தங்கத்தை இழந்துவிட்டோம்!!
அகிம்சை வழியில் அறத்தை கையிலேந்திய திலீபனைக் கொன்ற கைகள்தான் இன்று உன்னையும் தின்றது!
திலீபன் இறந்தபோது அவன் தாய் கூறினாள்- "திலீபனைப் புதைக்கவில்லை..விதைத்திருக்கிறோம்"
தம்பி தமிழ்ச்செல்வா "உன்னை எரிக்கவில்லை...ஏற்றியிருக்கிறோம்"